கொவிட்-19லிருந்து ஏற்படும் உலகாளவிய மீட்சி அனைவரையும் உள்ளடக்கியதாகவும் நீடித்து நிலைத்திருப்பதாகவும் மீள்திறன் மிக்கதாகவும் இருக்க வேண்டும் எனும் அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் அழைப்பை சிங்கப்பூர் வரவேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற 109வது அனைத்துலக தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19 பரவலுக்குப் பிந்திய வருங்காலத்தில் எல்லாருக்கும் மேம்பட்ட வேலைகளையும் பாதுகாப்பான வேலை இடங்களையும் உறுதி செய்ய சிங்கப்பூர் அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், சம்பளச் செலவுகளை ஈடுகட்டவும் வேலைகளைப் பாதுகாக்கவும் இதுவரை 18 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது கிட்டத்தட்ட 25 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. 150,000 நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு அது உதவியுள்ளது.
அத்துடன், சுயதொழில் செய்வோருக்கான சம்பள உதவித் தொகை திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 200,000 பேர் பயன்பெற்றுள்ளனர் என்றார் டாக்டர் டான். அவர்களுக்கு உதவித் தொகையாக மொத்தம் 9,000 வெள்ளி வழங்கப்பட்டிருக்கிறது.
எஸ்ஜி யுனைட்டெட் வேலைப் பயிற்சித் திட்டத்தின் வழி இவ்வாண்டு பிப்ரவரி வரை, ஏறத்தாழ 93,000 ஊழியர்களுக்கு வேலைப் பயிற்சி இடங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் அமைச்சர்.
மேலும், ஊழியர்களின் மனநலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஐவர்க்ஹெல்த் (iWorkHealth) எனும் மின்னியல் கருவி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் மன உளைச்சல் கொள்ளக்கூடிய அம்சங்களைக் கண்டறிய உதவுகிறது அந்தக் கருவி. வெளிநாட்டு ஊழியர்கள் மனநலத்தின் தொடர்பில் விழிப்புணர்வும் உதவியும் பெற உதவும் திட்டமும் உள்ளது.

