அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த பிரெஞ்சு நாட்டவர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) சிங்கப்பூர் வழியாக இடைவழிப் பயணம் மேற்கொண்டனர். சிங்கப்பூரைவிட்டு அவர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 15) புறப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
திரு டெய்லட் ரெமி வின்சென்ட் கிறிஸ்டோஃப்-திருமதி பர்டெட் லியோனி தம்பதியும் அவர்களது மூன்று பிள்ளைகளும் மலேசியாவில் தங்கியிருந்தனர். லங்காவி தீவில் சட்டவிரோதமாக தங்கியதற்காக அவர்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக பிரான்சுக்கு அவர்களை மலேசிய அதிகாரிகள் நாடு கடத்தினர்.
சிங்கப்பூர் வழியாக அவர்கள் இடைவழிப் பயணம் மேற்கொண்டபோது கர்ப்பிணியான திருமதி பர்டெட், தமக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிவித்திருந்தார். சிங்கப்பூருக்குள் நுழைய அவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
சாங்கி விமான நிலைய மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
"டெய்லட்டும் அவரது பிள்ளைகளும் சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் உள்ள இடைவழிப் பயணிகளுக்கான ஹோட்டலில் தங்கியிருந்தனர். மலேசியாவிலிருந்து பிரான்சுக்கு அவர்கள் நாடு கடத்தப்பட்டதால் சிங்கப்பூருக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பர்டெட்டிற்கு மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்ட பின் டெய்லட் மற்றும் அவர்களது பிள்ளைகளுடன் ஹோட்டலில் அவர் மீண்டும் இணைந்தார்," என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
திரு பெய்லட், கடந்த ஆறு ஆண்டுகளாக லங்காவி தீவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக theVibes.com இணையத்தளம் குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்சில் எட்டு வயது சிறுமியை அவளது பாட்டியிடமிருந்து கடத்திய தில் திரு டெய்லட்டிற்கு பங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, அனைத்துலக போலிஸ் அவருக்கு கைதாணை பிறப்பித்திருந்ததாக theVibes.com கூறியது. பின்னர் சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு, சுவிஸ் போலிசாரால் அச்சிறுமி மீட்கப்பட்டாள்.
இந்நிலையில், சிங்கப்பூரில் தங்களது இடைவழிப் பயணத்தின்போது எந்தவொரு தருணத்திலும் அவர்கள் ஐவரும் சிங்கப்பூர் போலிசாரால் தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை என்றது உள்துறை அமைச்சு.
"அவர்கள் இடைவழிப் பயணிகள் என்பதால், அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பராமரிப்பில் இருந்தனர். ஜூன் 15ஆம் தேதி பிரான்சுக்கு பயணத்தைத் தொடர டெய்லட்டிற்கு உத்தரவிடப்பட்டது," என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
திரு டெய்லட்டுடன் சேர்ந்து தாமும் தமது பிள்ளைகளும் பிரான்சுக்கு பயணத்தைத் தொடர திருமதி பர்டெட் விடுத்த கோரிக்கையை விமான நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் அப்பேச்சாளர் சொன்னார்.