தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இவ்வாண்டு முதல் காலாண்டில் தொழிலாளர் சந்தை மீட்சி, 12,200 புதிய வேலைகள்

2 mins read
3c9cc813-cef4-4017-925c-0e808da71763
-

சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தையில் காணப்படும் மீட்சி இவ்வாண்டின் முதல் காலாண்டில் தொடர்ந்தது.

கொரோனா கொள்ளைநோய் தாக்கத் தொடங்கிய பிறகு முதன் முதலாக மொத்த வேலைகள் உருவாக்கம் கூடியுள்ளது.

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைத் தவிர்த்து, இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 12,200 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக மனிதவள அமைச்சு இன்று (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்த வேலை உருவாக்கம், இதற்கு முந்திய நான்கு காலாண்டு வேலையிழப்புகளுக்குப் பின் வந்திருப்பதாக அமைச்சு சுட்டியது.

இவ்வாண்டு முதல் காலாண்டின் வேலை உருவாக்கம், ஏப்ரல் மாத முன்னுரைப்பான 4,800 என்ற எண்ணிக்கையைவிட அதிகம் என்பதையும் அமைச்சின் அறிக்கை விளக்கியது.

வெளிநாட்டு ஊழியர் வருகைக்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அவர்களுக்கான புதிய வேலைகள் குறைந்துள்ளன. ஆனால், சிங்கப்பூர்வாசிகள் வேலையில் அமர்த்தப்படுவது அதிகரித்துள்ளதாக அமைச்சு தெளிவுபடுத்தியது.

தகவல், தொலைத் தொடர்பு, உணவு, பானத் துறை, சுகாதாரம், சமூக சேவை, நிர்வாகம், அதற்கு தேவைப்படும் துணைச் சேவை போன்ற துறைகளில் சிங்கப்பூர்வாசிகளுக்கு பதிய வேலை நியமனங்கள் கிடைத்துள்ளன.

மேலும், வேலையிழந்த சிங்கப்பூர்வாசிகளில் அதிகமானோருக்கு ஆறு மாதங்களுக்குள் புதிய வேலை கிைடத்ததுடன் வேலையில்லாதோர் விகிதத்துக்கு கிட்டத்தட்ட சரிசமமான விகிதத்தில் வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளதாக அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

எனினும், கொள்ளைநோய் தாக்கத் தொடங்கிய நிலைக்கு முந்திய சூழலை தொழிலாளர் சந்தை இன்னமும் எட்டவில்லை என்றும் அமைச்சு விளக்கமளித்தது.

இவை ஒருபுறமிருக்க, பொருளியலில் உள்ள நிச்சயமற்ற தன்மை, அண்மையில் அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட உயரிய விழிப்புநிலை நடவடிக்கைகள் போன்றவை இரண்டாம் காலாண்டின் தொழிலாளர் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்