கல்வி அமைச்சு: சிங்கப்பூர் பள்ளிகளில் இனவாதத்திற்கு இடமில்லை

கல்வி அமைச்சு: சிங்கப்பூர் பள்ளிகளில் இனவாதத்திற்கு இடமில்லை

2 mins read
be3e8947-f4f8-4ba6-9583-44ae1cac28f9
-

பள்ளிச்சூழலில் மாணவர்களும் ஆசிரியர்களும் இனவாதத்திற்கு ஆளானால் அது தொடர்பில் விசாரணை நடத்த உடனே தங்களின் பள்ளிக்குத் தெரியப்படுத்த வேண்டும். இத்தகைய இனவாதச் செயல்களில் ஈடுபடுவோர், ஆலோசனை அமர்வுகளுக்கு அனுப்பப்படுவதுடன் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மை காலமாக இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் இனவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

பொதுப் பள்ளிகளில் இனவாதத்திற்கு ஆளானதாக சிறுபான்மை இனத்தவர்கள் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களைக் கூறி வருகின்றனர்.

தங்களின் முன்னாள் வகுப்பு நண்பர்கள் இனம் சார்ந்த துன்புறுத்தலில் ஈடுபட்டது, ஆசிரியர்கள் பாகுபாடு காட்டியது போன்றவற்றைச் சித்திரிப்பதாக அவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் அமைந்தன.

தங்களின் தமிழாசிரியர் விடுப்பில் இருந்தபோது, சீன வகுப்பு நடந்த அறை ஒன்றில் நாற்காலி, மேசை இருந்தும் தரையில் உட்கார தமிழ் மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தமக்கு நேர்ந்ததைப் பதிவிட்டிருந்தார்.

கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று சீன ஆசிரியரிடம் அவர் கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீக்கியர் ஒருவரும் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். தலைப்பாகை அணிந்திருந்ததால் அவரின் பள்ளி நண்பர்கள் அடிக்கடி அவரைக் கேலிச் செய்ததாக அவர் கூறினார். தொடக்கநிலை ஆறு மாணவர்கள் சிலர் அவரைக் கழிவறையில் வழிமறித்துத் தாக்கியதாகவும் தலைப்பாகையைக் கிழித்தெடுத்ததாகவும் பின்னர் கழிவுத் தொட்டிக்குள் தலையை முக்கிவிட்டு அவரைக் குத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இனவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் சிங்கப்பூர் பள்ளிகளில் இனவாதத்திற்கு இடமில்லை என்றும் கல்வி அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

இனவாதம் என வரும்போது கல்வியாளர்கள் தங்களின் துறைக்குத் தகுந்தாற்போல் மிக உயர்ந்த தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்