முன்னைய காலங்களில் ஏற்பட்ட பொருளியல் பின்னடைவுகளுடன் ஒப்பிடும்போது, கடந்தாண்டு கொவிட்-19 பரவலின்போது இளையரிடையே வேலையின்மை விகிதம் அதிகமாகக் கூடியது.
மனிதவள அமைச்சு இந்தஆண்டின் முதல் காலாண்டின் வேலை நிலவரம் பற்றி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இங்கு குடியிருக்கும் இணையர்களின் வருடாந்திர சராசரி வேலையின்மை விகிதம் 2020ல் 10.6 விழுக்காடாக இருந்தது. ஒப்பு நோக்க, 2009 உலகளாவிய பொருளியல் நெருக்கடியின்போது அந்த விகிதம் 8.8 விழுக்காடாகவும் 2003 சார்ஸ் பரவலின்போது 9.3 விழுக்காடாகவும் இருந்தது.
15 முதல் 24 வரையிலான வயதுள்ளவர்களை அமைச்சு இளையர்கள் என்று வரையறுத்தது.
சில்லறை வர்த்தகம், உணவு பானம் ஆகிய துறைகளில் தற்காலிகமாகவோ பகுதிநேரமாக வேலை கிடைப்பதில் இளையர்கள் அதிக சிரமத்தை எதிர்நோக்கியதை இந்தப் புள்ளிவிவரம் காட்டக்கூடும் என்றது அமைச்சு.
முன்னைய ஆண்டுகளின் பொருளியல் பின்னடைவுகளுடன் ஒப்பிடுகையில் இத்துறைகள் 2020ல் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்று அமைச்சு கூறியது.
இங்குள்ள பத்து இளையர்களில் நான்கு பேர் தற்காலிகமாகவோ ஒப்பந்த அடிப்படையிலோ வேலை செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள், படித்துக் கொண்டே வேலை பார்ப்பவர்கள்.
அத்துடன், மற்ற வயதுப் பிரிவு களில் உள்ளவர்களைவிட இளையர்களிடையே வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது.
வேலைச் சந்தையில் புதிதாக நுழைந்து வேலை தேடும் பட்டதாரிகளும் இந்த வயதுப் பிரிவில் இருப்பது அதற்கு ஒரு காரணம் என்று அறிக்கை தெரிவித்தது.
படித்து முடித்தவர்கள் பொருத்தமான வேலையைத் தேடும்போது வேலை மாறுவர். அத்துடன் படித்துக்கொண்டிருக்கும் இளையர்கள் ஒப்பந்த அல்லது தற்காலிக வேலைகளை மாற்றக்கூடும். இதுபோன்ற காரணங்களால் இந்த வயதுப் பிரிவினர் அடிக்கடி வேலை மாறுவர் என்றும் அறிக்கை கூறியது.
இளையர்கள் இடையிலான நீண்டகால வேலையின்மை விகிதம் முன்னைய காலங்களில் ஏற்பட்ட பொருளியல் சரிவுகளுக்கு ஒப்பாக இருந்தது.
2020ல் அது 1.1%. ஒப்புநோக்க, 2003ல் நீண்டகாலத்துக்கு வேலையின்றி இருக்கும் இளையர்களின் விகிதம் 1.3 விழுக்காடாகவும் 2009ல் ஒரு விழுக்காடாகவும் இருந்தது.

