சிங்கப்பூரில் மின்னியல் உற்பத்தியை மேம்படுத்த 18 மில்லியன் வெள்ளி செலவில் புதிய ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்னும் உயர்தரமான, வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான பொருட்கள் அவர்களுக்கு விரைந்து கிடைப்பதற்கு இந்த ஆய்வுக்கூடம் உதவி செய்யும்.
ஏ*ஸ்டார் எனும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வுக் கழகமும் உற்பத்தித் துறை மென்பொருளை உருவாக்கும் ஆர்க்ஸ்டோன் எனும் உள்ளூர் நிறுவனமும் இணைந்து புதிய ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளன.
உற்பத்தியாகும் பொருட்கள் எவ்வளவு சுற்றுச்சூழல் வளங் களைப் பயன்படுத்துகின்றன என்பதை வெளிப்படையாகக் காட்டவும் அந்த ஆய்வுக்கூடம் உதவும்.
மின்னியல் உற்பத்தியில் தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனையும் செயல்திறனையும் உயர்த்தவும் மனிதத் தவறுகளைக் குறைக்கவும் மின்னியல் உற்பத்தி பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வுக்கூடத்தின் திறப்பு விழாவில் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியில் உற்பத்தித் துறை முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறினார்.
சென்ற ஆண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு முதல் காலாண்டில் உற்பத்தித் துறை 7.5% வளர்ச்சி கண்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் காணப்பட்ட 0.2% வளர்ச்சியை விட இது வெகு அதிகம்.
"செலவைக் குறைத்துப் போட்டி யிடாமல், அறிவுசார் சொத்துரிமை, நிபுணத்துவம், திறன்கள் போன்றவற்றைக் கொண்டு போட்டியிடும் உயர் மதிப்பு உற்பத்தியை நோக்கி சிங்கப்பூரை நகர்த்துவது இலக்கு," என்று திரு கான் கூறினார்.
உள்நாட்டில் உருவான நிபுணத்துவமும் அறிவுத்திறனும் இருக்கும் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களைக் கொண்ட வலுவான அடித் தளம் நாட்டுக்குத் தேவை என்றார் அவர்.
அப்போதுதான் காலத்துக்கு ஏற்ப இருக்கவும் மீட்சித்திறன் உள்ள வளர்ச்சியை உருவாக்கவும் சிங்கப்பூரால் முடியும் என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.

