செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
746e9339-6797-4e23-854c-d51110d351c2
-

மாற்று தடுப்பூசிகளில் ஏற்படும் சிக்கல்களுக்கும் காப்புறுதி

சினோவேக் போன்ற மாற்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்வோருக்கு சிக்கல்கள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், இனி அவர்கள் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தின்கீழ் காப்புறுதி பெறுவார்கள். ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்ட சந்தாதாரர்களுக்கு அது பொருந்தும்.

சிங்கப்பூரின் வாழ்நாள் காப்புறுதிச் சங்களம் நேற்று இதனை அறிவித்தது. ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களை வழங்கும் ஏழு காப்புறுதி நிறுவனங்களும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

சுகாதார அறிவியல் ஆணையத்தின் சிறப்பு ஏற்பாட்டின் கீழ் ஃபைசர், மொடர்னா அல்லாத மாற்றுத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம். தற்போது அந்த ஏற்பாட்டில் சினோவேக் தடுப்பூசி மட்டுமே உள்ளது.

அரசாங்கத் திட்டத்தில் சினோவேக் வழங்கப்படாததால், அதனைப் போட்டுக்கொள்வோருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் அரசாங்கத்தின் தடுப்பூசிக் காயம் நிதி உதவித் திட்டத்துக்குத் தகுதி பெற மாட்டார்கள்.

கஞ்சா மருந்தைப் பயன்படுத்த இரண்டாவது நபருக்கு அனுமதி

சிங்கப்பூரில் இரண்டாவது நபருக்கு கஞ்சா அடங்கிய மருந்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அவர் இளம் நோயாளி என்றும் அவருக்குச் சிகிச்சைக்குக் கட்டுப்படாத வலிப்பு நோய் உள்ளது என்றும் உள்துறை அமைச்சு கடந்த புதன்கிழமை தெரிவித்தது. 2019ல் அது குறித்து சுகாதார அறிவியல் ஆணையத்திடம் மருத்துவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

வேறு எல்லா பொருத்தமான சிகிச்சை முறைகளும் பலன் அளிக்கவில்லை. இளம் நோயாளியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததைக் கருத்தில் கொண்டு கஞ்சா மருந்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சு கூறியது.

உள்துறை, சுகாதார அமைச்சுகளுடன் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவையும் அனுமதி வழங்கின.

கடந்த 2019ல் வேறு சிகிச்சைகளை ஏற்காத வலிப்பு நோய் உள்ள ஒரு சிறுமிக்கு கஞ்சா கொண்ட மருந்தை அளிக்க சிங்கப்பூரில் முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது.

பார்க் ஹோட்டல் நிறுவனத்தை மூட கடன்காரர் விண்ணப்பம்

பார்க் ஹோட்டல் மேனேஜ்மண்ட் நிறுவனத்தை முடக்குவதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனம் அண்மை வரை, ஹாங்காங்கைச் சேர்ந்த செல்வந்தர் தலைமை வகிக்கும் பார்க் ஹோட்டல் குழுமத்துக்குச் சொந்தமாக இருந்தது.

நியூ பார்க் எனும் முதலீட்டு நிறுவனம் அந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தது. பார்க் ஹோட்டல் நிறுவனம் நடத்தும் கிராண்ட் பார்க் ஆர்ச்சர்ட் ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாதது பிரச்சினைக்குக் காரணம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூறியது.

கிராண்ட் பார்க் ஆர்ச்சர்ட் ஹோட்டல், டாக்காஷிமாயா, பேரகான் கடைத்தொகுதிகளுக்கு நடுவில் இருக்கும் நைட்ஸ்பிரிட்ஜ் கடைத்தொகுதியின் மேலே உள்ளது.

அந்த ஹோட்டல் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டோர் தங்கும் இடங்களில் ஒன்றாக செயல்படுகிறது.