US$60 பில்லியன் கடன் வசதி மேலும் நீட்டிப்பு

US$60 பில்லியன் கடன் வசதி மேலும் நீட்டிப்பு

2 mins read
726c2213-524f-434d-bb55-1f3e8ef91a29
-

சிங்கப்பூர் நாணய ஆணையம், அமெரிக்க மத்திய வங்கியுடன் கூடிய தனது US$60 பில்லியன் (S$80.1 பில்லியன்) நாணய மாற்று ஏற்பாட்டை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை மறுபடியும் நீட்டித்துள்ளது. ஆணையம்- அமெரிக்க டாலர் மாற்று ஏற்பாடும் அது வரை நீட்டிக்கப்படும்.

இதன்படி வங்கிகள் சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் செயல்படும் நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரில் US$60 பில்லியன் வரை கடன் கொடுக்க வசதி இருக்கும் என்று ஆணையம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த US$60 பில்லியன் வசதி முதன்முதலாக சென்ற ஆண்டு அமெரிக்க மத்திய வங்கியுடன் ஏற்படுத்தப்பட்டது.

நாணய மாற்று வசதியும் ஆணையம்-அமெரிக்க மத்திய வங்கி ஏற்பாடும் இந்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும் என்று பிறகு அறிவிக்கப்பட்டது.

இந்த இரண்டு ஏற்பாடுகளையும் செப்டம்பர் 30 வரை ஆணையம் நீட்டித்தது. இந்த ஏற்பாடு தொடங்கியது முதல் சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் வங்கிகள் கடன் கொடுப்பதற்காக US$25 பில்லியன் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டு உள்ளது.

இந்த ஏற்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அமெரிக்க டாலரில் கடன் கொடுப்பதற்கான நிலவரங்கள் தடைபடாமல் நிலையாக இருந்து வரும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர், அனைத்துலக நிதி மையமாகத் திகழ்ந்து வருகிறது. ஆசியாவுக்குள் எல்லை கடந்து அமெரிக்க டாலரில் கடன் வழங்கு வதில் சிங்கப்பூர் முக்கிய பணியாற்றி வருகிறது. ஆணையம் உள்ளிட்ட 14 மத்திய வங்கிகளுடன் அமெரிக்க மத்திய வங்கி இத்தகைய நாணய மாற்று கட்டமைப்பைக் கொண்டுள்ளது.