முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும் அல்லது தனிநபர்களுக்கிடையே அதிக நேரம் தொடர்பில் உள்ள ஊழியர்கள் விரைவு ஆன்டிஜென் சோதனை முறையைப் பயன்படுத்தும் கொவிட்-19 பரிசோதனைக்கு வழக்கமாகச் செல்ல வேண்டும்.
14 நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த விரைவான, எளிதான பரிசோதனைகள் (எஃப்இடி) ஜூலை நடுப்பகுதியில் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சுகள்நிலைப் பணிக் குழு நேற்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.
அமர்ந்து உண்ணும் உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், முகம், நகம் ஆகிய அழகு பராமரிப்புச் சேவை, உடல் வனப்பு நிலையங்கள், உடற்பிடிப்பு நிலையங்கள், சிகையலங்காரம், ஒப்பனைச் சேவை, உடறுலுதிக் கூடங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தக் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேற்கண்ட நிலையங்களில் வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் முகக்கவசம் அணிவதில்லை. இந்த 'எஃப்இடி' பரிசோதனைகள், நிலையங்களின் முதலாளிகள் மேற்பார்வையில் சுயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பணிக்குழு எதிர்பார்க்கிறது.
இந்தப் பரிசோதனை முறையை வர்த்தகங்கள் தொடங்குவதற்கு உதவும் பொருட்டு, முதலாளிகள் சுய பரிசோதனை செய்யும் ஊழியர்களை மேற்பார்வையிட மூத்த ஊழியர்களைப் பயிற்சிக்கு அனுப்பலாம்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்தப் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். சுய பரிசோதனை செய்துகொள்ளும் கருவிகளும் மேற்கூறப்பட்ட நிலையங்களுக்குக் கொடுக்கப்படும்.
சில உணவு, பானத் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை முன்னதாகவே இந்தப் பயிற்சிக்கு அனுப்பிவிட்டன. அவர்கள் இம்மாதம் 21ஆம் தேதியிலிருந்து இந்த சுய பரிசோதனையை மேற்கொள்ள தொடங்கலாம் என்றது பணிக்குழு.
தங்கள் ஊழியர்களுக்குச் சுய பரிசோதனை முறையை அறிமுகப்படுத்த இயலாத சிறிய வர்த்தகங்களுக்கு உதவும் வகையில், விரைவு பரிசோதனை நிலையங்கள் (ஏஆர்டி) அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட பணிக்குழு, தொடக்கமாக தேக்காவில் ஒரு நிலையமும் ஈசூனில் ஒரு நிலையமும் இம்மாதம் 21ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று விவரித்தது.
இதுபோன்ற விரைவு பரிசோதனை நிலையங்கள் மற்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் ஊழியர்கள் மூலம் கிருமித்தொற்று அபாயத்தைக் குறைக்க அரசாங்கம் அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
முதியோருக்குச் சேவையாற்றும் பராமரிப்பு இல்லங்களுக்குச் செல்லுதல் இம்மாதம் 21ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 21ஆம் தேதி முதல் இந்த இல்லங்களுக்கான வருகை மீண்டும் தொடங்கும்போது, வருகையாளர்கள் 'எஃப்இடி' பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
"விரைவு பரிசோதனை நிலையங்களை அமைக்க சில இல்லங்களுக்கு அதிக காலம் தேவைப்படுவதால், அது பின்னொரு தேதியில்தான் தொடங்கப்படும். சில இல்லங்கள் வருகையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். பின்னர் சோதனை செயல்முறைகள் தயாராகும்போது வருகையாளர் எண்ணிக்கையைக் கூட்டலாம்," என்று குழு கூறியது.

