டிபிஎஸ் வாடிக்கையாளர்களில் சிலர் தங்களுடைய வங்கிக்கணக்கில் தவறான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக புகார் கூறியுள்ளனர். கடன் அல்லது பற்று அட்டையைப் பயன்படுத்தியபோது இரண்டு முறை கட்டணம் கழிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனை அறிந்திருப்பதாகக் கூறிய டிபிஎஸ் வங்கி, பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கப்படு வதாகக் கூறியது.
சில குறிப்பிட்ட அட்டைகளில் அத்தகைய கோளாறு நடந்துள்ளதாகவும் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
"பிரச்சினையை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு கண்டு வருகிறோம். ஒரே காரணத்துக்காக இரண்டு முறை பரிவர்த்தனை இடம்பெற்றிருந்தால் பணத்தை நாளை திருப்பியளிப்போம்," என்று ஃபேஸ்புக் பதிவில் சிங்கப்பூரின் ஆகப்பெரிய வங்கியான டிபிஎஸ் உறுதியளித்திருந்தது.
இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட நிர்வாகம், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டியது.
இதற்கிடையே வங்கியின் செயலி மற்றும் இணையத் தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் 'அதிகமான வாடிக்கையாளர்கள் சேவையைப் பயன்படுத்துவதால் சிறிது நேரம் கழித்து நுழையவும்' என்று வங்கியின் இணையத்தளத்தில் அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.
ஒன்றுக்கு மேற்பட்ட கட்டணக் கழிவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் இல்லத்தரசியான அஸியூரா இர்ஃபானும் ஒருவர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அவர், கிராப் டாக்சிக்கு $11.70 கட்டணம் செலுத்தியபோது இரண்டு முறை கழிக்கப்பட்டிருந்தது என்றார்.
இதேபோன்று தனது கணவரும் ஜயண்ட் பேரங்காடியில் பொருட்களை வாங்கியதற்காக இரண்டு முறை 29 வெள்ளி வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இருவரும் பிஓஎஸ்பி பற்று அட்டையைப் பயன்படுத்தியிருந்தனர்.
இப்போதுவரை பிஓஎஸ்பி செயலியைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் திருமதி அஸியூரா நேற்றுக் காலை சொன்னார்.
சில வாடிக்கையாளர்கள், வங்கி யின் நேரடி தொலைபேசி சேவை எண்ணுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று வங்கியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப் பிட்டிருந்தனர். திருப்பியளிக்கப்படும் பணம் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் தானாக சேர்க்கப்படுமா அல்லது அதற்காக விண்ணப்பிக்க வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

