சுயமாக செயல்பட திணறும் 100,000 சிங்கப்பூர் வாசிகள்

சுயமாக செயல்பட திணறும் 100,000 சிங்கப்பூர் வாசிகள்

2 mins read
abbc9849-f501-442a-b7cc-2e589baa1307
நடப்பது, படிகளில் ஏறுவது போன்ற வற்றைச் செய்ய இயலாமல் 62,500 பேர் சிரமப்படு கிறார்கள். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்கப்பூரில் வசிக்கும் குடிமக்கள், நிரந்தரவாசிகளில் ஏறக்குறைய 100,000 பேர் சுயமாகச் செயல்பட திணறுகிறார்கள். அல்லது அப்படி செயல்பட முடியாமல் இருக்கிறார்கள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வது போன்ற அடிப்படை காரியமே அவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. அவர்களில் 62,500 பேர் நடக்க, படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல சிரமப் படுகிறார்கள்.

தங்கள் துணியைத் தாங்களே துவைப்பது, உடுத்துவது போன்றவற்றைச் செய்வது 32,100 பேருக்குப் பெரும் பாடாக இருக்கிறது. அல்லது அவர்களால் முடியவில்லை.

மக்கள்தொகை மூப்படைந்து வரும் நிலையில், சிங்கப்பூரில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள் பற்றிய பல விவரங்கள் இப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதன் முதலாக இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கைக்காக மொத்தம் 150,000 குடும்பங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. பார்ப்பது, கேட்பது, நடமாடுவது, தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்வது, தகவல் தொடர்பு, நினைவு, கவனம் செலுத்துவது ஆகிய ஆறும் தங்களுக்குச் சிரமமாக இருப்பதாக 97,600 பேர் தெரிவித்தனர்.

அவர்களில் 69,400 பேருக்கு வயது 65 மற்றும் அதற்கும் அதிகம். இந்த அளவு, மூத்த குடிமக்களில் 11.2% ஆகும்.

மூத்த குடிமக்களில் 10 பேரில் ஏறக்குறைய ஒன்பது பேர் வாழ்க்கைத் துணையுடன் அல்லது பிள்ளையுடன் வசிக்கிறார்கள். 65 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்களைப் பார்க்கையில் ஆண்களைவிட பெண்களே சுயமாகச் செயல்படுவதில் அதிக சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள்.

இந்தத் துறை பற்றிய தகவல்கள், ஒரு குடியிருப்புப் பேட்டை மற்றும் அதில் தேவைப்படக்கூடிய பராமரிப்பு நிலையங்கள் பற்றிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் உதவும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்து இருக்கிறார்.

மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. 2030ல் நால்வரில் ஒருவருக்கு வயது 65 மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும். இந்த நிலவரம் கொள்கை உருவாக்கங்களில் பிரதிபலிக்கும் என தேசிய மக்கள் தொகை மற்றும் திறனாளர் பிரிவை மேற்பார்வையிடும் அமைச்சர் இந்திராணி தெரிவித்தார்.