பாதிக்கப்பட்ட டிபிஎஸ் வாடிக்கையாளர்களுக்கு பணம் மீண்டும் வரவு வைக்கப்பட்டது

2 mins read
053362a9-dc0e-4316-9693-3380fa38e299
-

கடன் மற்றும் பற்று அட்டைகளைப் பயன்படுத்தி பணம் கொடுக்கல் வாங்கல் செய்தபோது தங்களுக்கு அதற்கான கட்டணம் இரண்டு முறை கழிக்கப்பட்டதாக டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர். தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்றும் அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் சிங்கப்பூரின் மிகப் பெரிய வங்கியான டிபிஎஸ் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இன்று பணம் திருப்பித் தரப்பட்டு விட்டதாக வங்கி குறிப்பிட்டது. இதனிடையே, ஊடகக் கேள்வி களுக்குப் பதில் அளித்த இந்த வங்கியின் பேச்சாளர், பட்டுவாடா நடைமுறையில் கோளாறு இருந்தது தெரிய வந்ததாகவும் அதன் காரணமாக சில கடன் மற்றும் பற்று அட்டைகளில் போலியான பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.

இந்தத் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்றாரவர். வங்கிச் செயல்முறைகள் பாதுகாப்பானவையாக, எந்தக் குறை பாடும் இன்றி இருக்கின்றன என்று வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வங்கி உறுதி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பணம் இரண்டு முறை கழிக்கப்பட்டவர்களின் கணக்கில் அந்தத் தொகையைத் தானாகவே திருப்பி வரவு வைக்கும் நடைமுறை தொடங்கிவிட்டதாகவும் இது இன்று முடிந்துவிடும் என்றும் பேச்சாளர் மேலும் கூறினார்.

இதனிடையே, பணம் தவறுதலாகக் கழிக்கப்பட்ட சம்பவம் பற்றி புலன்விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி சிங்கப்பூர் நாணய ஆணையம் டிபிஸ் வங்கிக்கு உத்தரவிட்டு உள்ளது.

ஆணையத்தின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்ற வங்கி தவறி இருந்தால் மேற்பார்வை நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைக் கடுமையான ஒன்றாக ஆணையம் கருதுகிறது. நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தகவல்தொழில்நுட்ப முறைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்தி வரும் என்றும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செம்மையான முறையில் நிதிச் சேவைகளை அவை வழங்கும் என்றும் ஆணையம் எதிர்பார்ப்பதாக அதன் பேச்சாளர் கூறினார்.