சிங்கப்பூரில் வேலை இடங்களில் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். வேலை பார்க்கும் மனைவியர் உள்ள சிங்கப்பூர்வாசி தம்பதியர் விகிதம் 2020ல் 60% ஆகக் கூடி இருக்கிறது.
கணவர் மட்டும் வேலை பார்க்கும் தம்பதியர் விகிதாச்சாரம் 2010ல் 32.6% ஆக இருந்து 2020ல் 24.9% ஆகக் குறைந்துவிட்டது.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளை உள்ளடக்கிய சிங்கப்பூர்வாசி தம்பதியரைப் பார்க்கையில் 52.5% கணவன்- மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். கணவன்- மனைவி இருவரும் சரிசம கல்வித் தகுதியுடன் கூடிய தம்பதியர் விகிதம் 46.6% ஆக சென்ற ஆண்டில் அதிகரித்துள்ளது.
கணவரைவிட மனைவி குறைந்த கல்வித் தகுதியுடன் இருக்கும் தம்பதியர் விகிதம் குறைந்து இருக்கிறது. கணவரைவிட மனைவி அதிக கல்வித் தகுதியுடன் இருக்கும் தம்பதியர் விகிதம் சென்ற ஆண்டில் 22.5% ஆக உயர்ந்து உள்ளது.
இந்த நிலவரங்கள் இரண்டு அம்சங்களைக் காட்டுவதாக கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆளுமை மற்றும் பொருளியல் துறை தலைவர் கிறிஸ்டஃபர் கீ தெரிவித்தார்.
திருமண வாழ்வில் கணவன்- மனைவிக்கு இடைப்பட்ட சமத்துவம் கூடி இருக்கிறது. பொருளியலுக்குப் பெண்கள் அதிகம் தொண்டாற்றுகிறார்கள் என்று அவர் கருத்துரைத்தார்.
வேலை இடங்களில் பெண்களின் முழு ஆற்றலும் வெளிப்பட வேண்டுமானால் அவர்களின் பராமரிப்பு வேலைச் சுமையைக் குறைக்க மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
அதாவது பராமரிப்புப் பொறுப்புகள் குடும்பங்களில் இருந்து சமூகத்திற்கு மாற வேண்டும். அல்லது அவை கட்டணம் செலுத்தி பெறப்படும் நிபுணத்துவ சேவை ஏற்பாடாக ஆக வேண்டும் என்று திரு கிறிஸ்டஃபர் கீ கூறினார்.
இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொருளியல் வல்லுநர் வால்டர் தெரேசா, நிபுணத்துவ நீண்டகால பராமரிப்பு உதவிக்கு மேலும் நிதி தேவை என்றார்.
வெளிநாட்டுப் பணிப்பெண்கள், குடும்ப பராமரிப்பாளர்கள் ஆகியோர் முதியவர்களுக்குத் தேவைப்படும் சிக்கலான மருத்துவ தேவைகள் பற்றி நன்கு தெரிந்துகொள்ளும் அளவுக்குப் போதிய பயிற்சியோ அறிவோ பெற்றவர்களாக இருப்பதில்லை என்று அவர் விளக்கினார்.
கேர் ஷீல்டுஃலைப் போன்ற அண்மைய கொள்கை முயற்சிகள்கூட தேவையைப் போதிய அளவுக்கு ஈடு செய்ய இயலாமல் போகலாம் என்று தெரிவித்த திரு வால்டர், உடற்குறை உள்ள குடும்ப உறுப்பினரைக் கொண்ட யாருமே மாதம் கிடைக்கும் $600 அடிப்படை தொகை தேவைப்படும் பராமரிப்புக்குப் போதாது என்றே சொல்வார்கள் என்றார்.

