சிங்கப்பூரில் வேலை-தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையை மேம் படுத்த முதலாளிகளுக்குத் தேவையான தகவல் வளங்கள் கொண்ட இணையத்தளம், வேலையிடத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய அம்சங்களை மதிப்பிடும் இணையக் கருவி உள்ளிட்டவற்றை முத்தரப்புப் பங்காளி அமைப்புகள் அறிமுகம் செய்துள்ளன.
வேலை வாழ்க்கை சமநிலை தொடர்பான குடிமக்கள் பணிக்குழு முன்வைத்த பரிந்துரைகளை ஏற்று மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகிய முத்தரப்புகளும் அந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
எஸ்ஜி டுகெதர் இயக்கத்தின் பகுதியாக அந்தப் பணிக்குழு கடந்த 2019ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அரசாங்கமும் சிங்கப்பூரர்களும் கலந்துரையாடி தீர்வுகளை உருவாக்குவது இயக்கத்தின் நோக்கமாகும்.
பல்வேறு பின்னணிகளைக் கொண்ட 55 பேர் குழுவில் இருந்தனர். அவர்கள் முன்வைத்த 17 தீர்வுகளில் பன்னிரண்டை ஏற்றுக்கொள்வதாக முத்தரப்புப் பங்காளிகள் உறுதி தெரிவித்துள்ளன.
பணிக்குழுவுக்கு பாராட்டு தெரிவிக்க நேற்று இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தும் பணிகள் பற்றி மனிதவள அமைச்சு மேல்விவரம் அளித்தது.
முன்வைக்கப்பட்ட ஒன்பது பரிந்துரைகள் நடப்புக்கு வந்துள்ளன. இன்னும் மூன்று பரிந்துரைகளை நடப்புக்குக் கொண்டு வரும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மனிதவள அமைச்சர் பொறுப்பிலிருந்து தொடர்பு, தகவல் அமைச்சராக மாறியுள்ள திருமதி ஜோசஃபின் டியோ நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நீக்குப்போக்கான வேலைமுறை போன்ற அம்சங்களைப் பணிக் குழு விவாதித்ததாகவும் அவை கொவிட்-19 சூழலால் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
வீட்டில் இருந்து வேலை செய்வது தற்போது இயல்புநிலையாக இருப்பதால், பணிக்குழுவின் பல யோசனைகளை நடப்புக்குக் கொண்டுவர முடிந்தது என்றார் திருமதி டியோ.
நீக்குப்போக்கான வேலைமுறை உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்படி முதலாளிகளை ஊக்குவிக்க, முத்தரப்புப் பங்காளிகள் வேலை வாழ்க்கை தூதர்களை நியமித்துள்ளது. பணிக்குழு முன்வைத்த பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.
அத்துடன், வேலை- தனிப்பட்ட வாழ்க்கை சமநிலைக்கு எதிரான சவால்களைக் களைய சிறந்த வழிகளை முதலாளிகள் பகிர்ந்துகொள்வதற்கான ஆதரவுக் குழுக்களை மனிதவள நிபுணர்கள் கழகம் தொடங்கியுள்ளது. இவை துறை சார்ந்து இயங்கும்.
நிகழ்ச்சியில் பேசிய மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், கிருமிப் பரவல் சூழலில் வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்துப் பார்ப்பதில் ஊழியர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்று ஒப்புக்கொண்டார்.
நிறுவனங்களின் வேலை நேரம், தன்மை ஆகியவற்றில் வேறுபாடுகள் இருப்பதால், எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு இருந்துவிட முடியாது. ஆனாலும், வேலை வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்றார் அவர்.

