சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி 21 பேருக்கு புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் 14 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
அவர்களில் நால்வருக்கு மற்ற கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பு ஏதும் இல்லை.
எஞ்சிய பத்து பேர், முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.
தொடர்புபடுத்தப்பட்ட பத்து பேரில் ஏழு பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவில் வைக்கப்பட்டவர்கள்.
மற்ற மூன்று தொற்றுச் சம்பவங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளின்வழி கண்டுபிடிக்கப்பட்டன.
வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த அனைவரும் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். ஊழியர் தங்குவிடுதிகளில் தொற்றுகள் ஏதும் கண்டறியப்படவில்லை.
பள்ளிப் பேருந்து ஓட்டுநருக்கு தொற்று
புளோக் 115 புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்துடன் தொடர்பில் இருந்ததால் தொற்று ஏற்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட ஒன்பது பேரில் ஒருவர் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் ஆவார்.
அந்த 64 வயது நபர் தங்ளின் டிரஸ்ட் பள்ளிக்காக பேருந்து ஒட்டுநராகப் பணிபுரிபவர். அவருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்கெனவே போடப்பட்டுவிட்டன. அந்த நபர் புக்கிட் மேரா வட்டாரத்தில் வசிப்பவர் என்றும் அங்கு உள்ள உணவங்காடி நிலையங்களுக்குச் சென்று வருபவர் என்றும் சுகாதார அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
புக்கிட் மேரா வியூ தொற்றுக் குழுமத்தில் மீதமுள்ள எட்டுப் பேரில் நால்வர் தனிமையில் வைக்கப்பட்டிருந்தபோது தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள். அவர்களில் ஐந்து வயது சிறுவனும் நான்கு வயது சிறுமியும் அடங்குவர். இருவரும் தெலுக் பிளாங்கா புளோக் 78ஏ-யில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்கல்டாட்ஸ் பாலர்பள்ளியில் படிக்கின்றனர்.
மற்ற நால்வருக்கு தொற்று இருப்பது கண்காணிப்பில் தெரிய வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 115 புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத் தொற்றுக் குழுமத்தில் 65 தொற்றுச் சம்பவங்கள் உள்ளன. அது சிங்கப்பூரின் ஆகப் பெரிய தொற்றுக் குழுமமாக உருவெடுத்துள்ளது.

