சிங்கப்பூரில் அதிக வருவாய் ஈட்டுவோரில் பாதிப் பேருக்கு பணப் பிரச்சினை: ஆய்வு

சிங்கப்பூரில் அதிக வருவாய் ஈட்டுவோரில் பாதிப் பேருக்கு பணப் பிரச்சினை: ஆய்வு

2 mins read
4e174a0e-f1e4-49c9-b912-50cad55007da
-
Google News Preferred Icon

சிங்கப்பூரில் அதிக வருவாய் ஈட்டும் பிரிவினரில் ஏறக்குறைய பாதிப் பேர் போதிய சேமிப்பு இன்றி கவலைப்படுகிறார்கள்.

செயிண்ட் ஜேம்ஸ் பிளேஸ் என்ற சொத்து நிர்வாக நிறுவனம் நடத்திய ஆய்வு மூலம் இது தெரிய வந்துள்ளது.

குறைந்தபட்சம் $6,000 முதல் $20,000 க்கும் மேற்பட்ட தொகையை மாத வருவாயாகக் கொண்ட ஏறத்தாழ 1,000 சிங்கப்பூர்களை உள்ளடக்கி அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

போதிய தொகையைச் சேமிக்க முடியவில்லையே என்று கவலைப்படுவதோடு மட்டுமின்றி, செலவுகளை ஈடுசெய்யும் அளவுக்குத் தங்கள் மாத வருவாய் போதுமானதாக இல்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பல கட்டணங்களைச் செலுத்த சேமிப்பில் கைவைக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆகையால் ஓய்வுபெறும்போது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வாழ்க்கை பாணியை அனுபவிக்க போதிய பணம் தங்களிடம் இல்லாமல் போய்விடுமோ என்று 46% ஏங்குகிறார்கள். ஆனாலும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஆக்ககரமான ஒரு நிலவரம் காணப்படுகிறது.

ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் ஓய்வு காலத்திற்குத் திட்டமிடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றும் இந்த அவசரத்தை கொவிட்-19 தொற்று அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது. இது அவர்களின் விருப்பமாக இருக்கிறது.

ஆனால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் முன்பு போட்ட சேமிப்புத் திட்டங்களை நிறைவேற்றவே தடுமாறுகிறார்கள் என்பதுதான் உண்மை நிலவரம் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் ஓய்வு காலத்திற்கு என்று சேமித்து வைத்தவற்றில் கைவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.