புக்கிட் மேரா வியூ குடியிருப்பாளர்கள் அதிக நேரம் காத்திருக்கவில்லை
புக்கிட் மேரா வியூவில் உள்ள எட்டு வீவக புளோக்குகளில் குடியிருப்போர் நேற்று கொவிட்-19 கட்டாய பரிசோதனை செய்துகொண்டனர். அவர்கள் யாரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவில்லை.
பரிசோதனை சரளமாகத் தொடங்கியது. பெரும்பாலானவர்கள் 20 நிமிடங்கள்கூட காத்திருக்கவில்லை என்று குடியிருப்பாளர்கள் கூறினர். நடமாட சிரமப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
புளோக் 116, 117, 118, 119, 124A, 124B, 125, 126 ஆகியவற்றில் வசிப்போருக்கு அப்பகுதியில் மூன்று இடங்களில் கட்டாய பரி சோதனை நடத்தப்பட்டது.
புக்கிட் மேரா வியூவில் இருக்கும் 119 வது புளோக்கில் வசிக்கும் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 21 பேருக்குத் தொற்று இருந்தது தெரிய வந்ததை அடுத்து கட்டாய பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சில புளோக்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீரில் கிருமி எச்சங்கள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த எட்டு புளோக்குகளும், எண் 115 புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்திற்கு அருகே இருக்கின்றன.
இந்த நிலையம் சிங்கப்பூரின் ஆகப் பெரிய திறந்த இட கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையது. இந்தக் குழுமத்தில் தொற்றுக்கு ஆளான 70 பேர் உள்னர். கட்டாய பரிசோதனை பற்றிய விவரங்களைக் கொண்ட கையேடுகள், குறுஞ்செய்திகள் குடியிருப்பாளர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டன.
இதனிடையே, நேற்று பரிசோதனைக்குச் சென்றவர்களில் சிலர் சென்ற வார தொடக்கத்தில் தாங்களாகவே பரிசோதனைக்குச் சென்று இருந்தவர்கள் என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
திருவாட்டி பெரேரா, சுகாதார அமைச்சைக் கேட்டுக்கொண்டதை அடுத்து கட்டாயம் அல்லாத அந்தப் பரிசோதனை சென்ற செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடந்தது. அப்போது நீண்ட வரிசை காணப்பட்டது.
சென்ற வாரம்தான் அந்தப் பரிசோதனை நடந்தது என்றாலும் குடியிருப்பாளர்கள் பலரும் தங்களை மீண்டும் பரிசோதித்துக்கொள்ள முடிவு செய்தனர்.
ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை அந்த எட்டு புளோக்குகளில் குடியிருக்கும் மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், அல்லது அந்தப் புளோக்குகளுக்குச் சென்று வந்துள்ளவர்கள், புக்கிட் மேரா வியூவில் அந்த மூன்று இடங்களில் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

