வீட்டில் சமையல் வேலைகளையும் பிள்ளைகளைப் பராமரிக்கும் பணிகளையும் மனைவியுடன் பகிர்ந்து கொள்வது, மகனையும் மகளையும் ஒரே மாதிரியாக நடத்துவது ஆகியவை குடும்பத்தில் ஆணாதிக்க மனப்போக்கை ஆண்கள் சமாளிப்பதற்கான வழிகள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'காசா ருத்ரா' என்ற நெருக்கடி கால அடைக்கலச் சேவை நிறுவனமும் 'ஈமான் கேட்டலிஸ்ட் கம்யூனிட்டி' என்ற நல்வாழ்வு அமைப்பும் சனிக்கிழமை நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலின் போது இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
'ஆணாதிக்க மனபோக்கை உடைப்பது: ஆடவர்களின் கண்ணோட்டம்'- என்ற தலைப்பில் நடந்த அந்தக் கலந்துரையாடலில் சுவா சூ காங் குழுத்தொகுதி நடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கார்னைன் அப்துல் ரஹ்மான், முஃப்தி அலுவலக துணை இயக்குநர் உஸ்தாத் இர்வான் ஹாடி, ஈமான் கேட்டலிஸ்ட் கம்யூனிட்டி என்ற நல்வாழ்வு அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹாஃபிஸ் உத்மான் ஆகிய மூவரும் பலவற்றையும் விவாதித்தனர்.
தொற்று காலத்தில் குடும்பங்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதன் காரணமாக சமூகத்தில் ஆணாதிக்க மனப்போக்கைச் சமாளிக்க அவசர தேவை ஏற்பட்டுள்ளதாகவும் திரு ஸுல்கார்னைன் கூறினார்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு பொருளியல் முடக்கம் நடப்பில் இருந்தபோது வீட்டில் தன் மனைவியுடன் வேலைகளைப் பகிர்ந்துகொண்ட தனது அனுபவங்களை எடுத்துக்கூறிய அவர், வீட்டில் ஆணாதிக்க மனப்போக்கு காணப்பட்டால் மகள்கள், மனைவி, மாதர்களின் முழு ஆற்றல்களும் மங்கிப் போய்விடும் என்று தெரிவித்தார்.
ஆண்களின் பணிகளையும் நியதிகளையும் ஆக்ககரமான முறையில் கைக்கொள்வது முக்கியமானது என்று திரு ஹாஃபிஸ் தெரிவித்தார்.
ஆணாதிக்க நியதிகள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இடம்பெறும் கொள்கை உருவாக்கத்தில் சமூகத் தலைவர்கள் அரசுக்கு உதவ முடியும் என்று திரு ஸுல்கார்னைன் தெரிவித்தார்.
உதவி தேவைப்படுவோர் 1800-777-0000 என்ற எண் மூலம் தேசிய வன்செயல் எதிர்ப்பு நேரடி தொலைபேசி வழி தொடர்புகொள்ளலாம். 1800-202-6868. என்ற தேசிய பராமரிப்பு நேரடி தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

