செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
ec94fd8d-37e4-4ee5-b26c-c174d2e1203a
-
Google News Preferred Icon

இணையத்தளம் தொடங்கி உள்ள உணவங்காடிக் கடைக்காரர்

மத்திய வணிக வட்டாரத்தில் கடை நடத்தும் உணவங்காடிக் கடைக்காரர்கள் 40 பேரிடம் தான் பேசியதாகவும் அவர்கள் அனைவருமே கொவிட்-19 காரணமாக தங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்கள் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்வது வழமையாகி இருப்பதால் அந்தப் பகுதியில் செயல்படும் கடைகள் பெரும்பாலும் காலியாகவே இருக்கின்றன என்று அவர்கள் தெரிவித்தனர். மேக்ஸ்வெல் உணவு நிலையத்தில் 'ராமென் தாஷியோ' என்ற உணவங்காடிக் கடையை நடத்திவரும் டான் ஹோக் சூன், 49, என்பவர், சிங்கப்பூரில் சென்ற ஆண்டு கொவிட்-19 தலைகாட்டியது முதல் வியாபாரம் 40% குறைந்துவிட்டதாகக் கூறினார். உணவைக் கொண்டு கொடுக்கும் சேவையை வழங்குவதற்காக இவர் நான்கு இணையச் செயலித் தளங்களை பயன்படுத்தி வருகிறார்.

ஆனாலும் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே உணவு கொண்டு வந்து கொடுக்கும்படி கேட்கிறார்கள் என்றார் இவர்.

இவர் தனது நிறுவனத்தைப் பிரபலப்படுத்துவதற்காக இணையத்தளத்தைத் தொடங்கி இருக்கிறார். ramen.sg என்ற இணையத்தளம் மூலம் தீவு முழுவதற்கும் உணவு விநியோகச் சேவையை சொந்தமாகத் தொடங்கி இருக்கிறார். உணவு விநியோகச் செயலிகளுக்கான தரகுக் கட்டணத்தை கொடுக்கவேண்டிய தேவை இல்லை என்றும் அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தன் இணையத்தளத்தில் விலை கூடாமல் இருக்கும் என்றும் இவர் கூறினார்.

இன்னமும் செயலியை நாடாத உணவங்காடிக் கடைக்காரர்கள்

சிங்கப்பூரில் வியாபாரம் மந்தமாக இருந்தும் சில உணவங்காடிக் கடைக்காரர்கள் இன்னமும் உணவு விநியோகச் செயலியைப் பயன்படுத்துவதில்லை.

உணவங்காடிக் கடைக்காரர்களில் சிலர் உணவு விநியோகச் செயலியைப் பயன்படுத்தாதது ஏன் என்பதையும் அந்தச் செயலியைப் பயன்படுத்துவதில் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் எட்டு அங்காடி நிலையங்களில் செயல்படும் 110 உணவங்காடிக் கடைக்காரர்களிடம் தான் பேசியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

தரகுக் கட்டணம் 30% முதல் 35% வரை கொடுக்க வேண்டி இருப்பதை 52 கடைக்காரர்கள் அதற்கான காரணமாகக் குறிப்பிட்டனர். இடம் போன்ற இதர பிரச்சினைகள் இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டனர்.

தாங்கள் விற்கும் உணவு, கேட்ட இடத்திற்குக் கொண்டு கொடுக்க பொருத்தமானதல்ல என்று மற்ற சிலர் தெரிவித்தனர்.

உச்ச ேநரங்களில் கடைக்கு வருவோருக்கு உணவு வழங்கும் அதே நேரத்தில் விநியோகத்திற்கு உணவை அனுப்புவதையும் செய்ய வேண்டி இருப்பது சிரமமாக இருக்கிறது என்று 26 கடைக்காரர்களும் உணவு விநியோகச் செயலியைப் பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்று 20% கடைக்கார்களும் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

50 பேர் வரம்பு விரைவில் அகல திரையரங்கு நடத்துவோர் விருப்பம்

திரையரங்குகளில் உணவு, பான பயனீட்டிற்கு விதிக்கப்பட்டு உள்ள தடை இன்று முதல் அகலுகிறது. இதை திரையங்கு நடத்துவோர் வரவேற்று இருக்கிறார்கள்.

இருந்தாலும் திரையரங்கு ஒன்றில் ஒரு காட்சிக்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற வரம்பு தொடர்ந்து இருந்து வரும் என்பதால் வருவாய் பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு திரையரங்குகளுக்கான வருவாய் 70% குறைந்து விட்டதாக மதிப்பிடப்படுகிறது.

சிங்கப்பூரில் மே 16 முதல் ஓர் அரங்கில் ஒரு காட்சிக்கு 50 பேர் மட்டுமே முன் பரிசோதனை இன்றி அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

திரையரங்கிற்குள் உணவு, பானம் அருந்த அனுமதி இல்லை. என்றாலும் இன்று முதல் உணவு, பானத் தடை அகலுகிறது. இருந்தாலும் 50 பேர் வரம்பு நீடிக்கிறது.

உணவு, பானத்திற்கான தடை அகலுவதால் ஓரளவிற்கு வருவாய் கிடைக்கும் என்றும் இருந்தாலும் 50 பேர்தான் அனுமதிக்கப்படுவர் என்பதால் தொடர்ந்து வசூல் பாதிக்கப்படும் என்றும் கூறும் திரையரங்கு நடத்துவோர், இந்த வரம்பு விரைவில் அகலும் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தனர்.