ஆர்த்தி சிவராஜன்
இனவாதம், சமய பாகுபாடுகள் காரணமாக அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தற்போது சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் கவனம் பெற்றுள்ளன. பல சிங்கப்பூர் மக்கள், குறிப்பாக இந்தியர்கள் இனப்பாகுபாடு குறித்த கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். கல்வி அமைச்சு, பள்ளிகளில் இனவாதத்துக்கு ஆளானால் அது பற்றி பள்ளிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இனவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆலோசனை தரப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு கூறியது. பள்ளிகளில், கல்வி நிலையங்களில், வேலையிடங்களில் இனவாத மனப்போக்கு வளராமல் இருக்க என்ன செய்வது, அப்படிப்பட்ட சூழலை எவ்வாறு சமாளிப்பது, அத்தகைய அனுபவத்தின் தாக்கத்திலிருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்து நிபுணர்களும் இளையர்களும் கருத்துரைத்துள்ளனர்.

