சிறுபான்மையினர் மட்டும்தான் இனவாதத்தை எதிர்கொள்கிறார்கள் என நாம் முடிவு செய்துவிடக்கூடாது. பள்ளிகளில் மாணவர்கள் மற்ற மாணவர்களின் தோற்றம், நடையுடை, பண்டிகைகள் பற்றி கேலியாகப் பேசுவார்கள். இதைப் போன்ற பெரும்பாலான கேலிப் பேச்சுகளை வேடிக்கை என்று நினைத்து நாமும் பேசுகிறோம், அவர்களும் பேசுகிறார்கள்.
இதில் புண்படுத்தும் நோக்கமோ ஆழமான வெறுப்போ, விஷமத்தனமோ பெரும்பாலும் இருக்காது. பல இனச் சூழலில் இத்தகைய பேச்சுகள் இயல்பாக நடக்கின்றன. இவை அளவுக்கு அதிகமாகி, புண்படுத்தும் நோக்கில் தொடரும்போதுதான் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, இதுபோன்ற பேச்சுகளை அறவே தவிர்ப்பது நல்லது. பிறரிடம் இருக்கும் வேறுபாடுகளை புரிந்துகொள்வது அவர்களுக்கு மதிப்பு அளிப்பதற்கு உதவும்.
தீபாவளி என்பது தமிழர்களின் புத்தாண்டு இல்லை என்பதை மற்ற இன மாணவர்களுக்கு விளக்குகிறோம். அதே நேரத்தில் சீனப் புத்தாண்டு, லேண்டர்ன் விழா, நோன்புப் பெருநாள் போன்ற விழாக்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்விழாக்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு அது உதவும்.
பள்ளிகளில் இனவாத அல்லது சமயப் பாகுபாடு பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, கோபப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது.
அதே நேரத்தில் பொறுத்துப் போவது மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும், அவ்வாறு பேசுபவர்களை மேலும் பேசத் தூண்டும். அதனால் அதற்குத் தீர்வுகாண வழி தேட வேண்டும்.
மனநல ஆலோசகர்களை தயங்காமல் உடனே சென்று பார்க்க வேண்டும். தமிழாசிரியர்கள், வகுப்பாசிரியர்களையும் நாடலாம்.
சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதைவிட இவ்வாறு உரிய ஆலோசனையைப் பெறுவது நன்மையாக அமையும்.
- தனபால் குமார், 51, தலைவர், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம்

