தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் (என்டியுசி) இணைந்த சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 'லிமோசின்' கார், சிற்றுந்து ஓட்டுநர்களுக்கும் விநியோக ஓட்டுநர்களுக்கும் ஒருமுறை மட்டும் $650 வரை ரொக்க வழங்குதொகை கிடைக்கும்.
பொருளியல் மெதுவாக மீண்டு வரும் நிலையில் அறிவிக்கப்பட்டு உள்ள நிவாரணத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த உதவி நடவடிக்கை இடம்பெறுகிறது.
தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் (NPHVA), தேசிய விநியோக வெற்றியாளர்கள் சங்கம் (NDCA) ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு இந்த நிதியாதரவு கிடைக்கும். இதன்மூலம் கிட்டத்தட்ட 13,000 ஓட்டுநர்கள் பலன் பெறுவர்.
இந்த வழங்குதொகையைப் பெற, லிமோசின் கார் ஓட்டுநர்களும் 13 பேர்வரை அமரும் வசதி கொண்ட சிற்றுந்து ஓட்டுநர்களும் தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கத்தின் சந்தா செலுத்தி வரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்; செல்லத்தக்க தொழில்முறை உரிமத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
அதுபோல, விநியோக ஓட்டுநர்கள் தேசிய விநியோக வெற்றியாளர்கள் சங்கத்தின் சந்தா செலுத்தி வரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்; பெட்ரோலில் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்தி வரவேண்டும்.
இவ்வாண்டு மார்ச் 30ஆம் தேதிக்குள், தன்னுரிமை ஓட்டுநர் (freelance driver) தொழில் மூலமாகவே அவர்கள் தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டி இருக்க வேண்டும். அவர்கள் கொவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதியைப் பெற்றிருக்கக்கூடாது.
அத்துடன், வருமானம், வாகனம், வேலை நடவடிக்கை, சுயதொழில் தகுதிநிலை போன்றவற்றுக்கான சான்றாவணங்களையும் அவர்கள் வழங்க வேண்டும்.

