ரெட்ஹில் வட்டாரத்தில் ஏழு வீவக புளோக்வாசிகளுக்கு கட்டாய கொவிட்-19 பரிசோதனை
ரெட்ஹில் லேன், ரெட்ஹில் குளோஸ் பகுதிகளில் ஏழு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கட்டாய கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
அங்கு சில புளோக்குகளின் கழிவுநீரில் கொரோனா கூறுகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
ரெட்ஹில் லேனில் 81, 82, 83 ஆகிய புளோக்குகளும் ரெட்ஹில் குளோசில் 87, 88, 89, 90 ஆகிய புளோக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு 'தொற்று இல்லை' என முடிவு கிடைத்தவர்களுக்கு இப்போதைய பரிசோதனை கட்டாயமில்லை.
"எவரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானால், அவர் தனிமைப்படுத்தப்படுவார். மேலும் கொரோனா பரவாமல் தடுத்து சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவர்," என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
அந்த புளோக்குகளுக்கு வந்து சென்றவர்களும் அவற்றின் குடியிருப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இது சமூகத்தில் அறிகுறியற்ற தொற்றுகளைக் கண்டறிய உதவும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
புளோக் 84A ரெட்ஹில் லேனில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலும் 89 ரெட்ஹில் குளோசின் கீழ்த்தளத்திலும் நேற்று தொடங்கிய பரிசோதனை நடவடிக்கை நாளைவரை இடம்பெறும்.
கட்டாயப் பரிசோதனை நடவடிக்கை குறித்து துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும் அமைச்சு கூறியது.
"பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்போர் இயன்றவரைக்கும் சமூகத்தில் கலந்துறவாடுவதைக் குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உடல்நலத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உடல்நலம் குன்றியுள்ளதாக நினைத்தால் உடனே அவர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும்," என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கையாக இந்தக் கட்டாயப் பரிசோதனை நடவடிக்கை இடம்பெறுகிறது என்று ராடின் மாஸ் தொகுதி எம்.பி. மெல்வின் யோங் கூறினார்.
அவர்களுக்கான பரிசோதனை நேரம் குறித்த தகவல் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும் என்றும் அவ்விரு தற்காலிகப் பரிசோதனை மையங்களில் ஒன்றில் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர் என்றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாக திரு மெல்வின் தெரிவித்து இருக்கிறார்.
"சுற்று வட்டாரத்தில் உள்ள புளோக்குகளைச் சேர்ந்தவர்கள், இம்மாதம் 6ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட புளோக்குகளுக்குச் சென்றிராவிடில், இப்போதைக்குப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தேவையில்லை," என்றார் அவர்.

