தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் (என்டியுசி) இணைந்த சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 'லிமொசின்', சிற்றுந்து ஓட்டுநர்களுக்கும் விநியோக ஓட்டுநர்களுக்கும் ஒருமுறை மட்டும் $650 வரை ரொக்க வழங்குதொகை கிடைக்கும்.
பொருளியல் மெதுவாக மீண்டு வரும் நிலையில் அறிவிக்கப்பட்டு உள்ள நிவாரணத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த உதவி நடவடிக்கை இடம்பெறுகிறது.
தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் (NPHVA), தேசிய விநியோக வெற்றியாளர்கள் சங்கம் (NDCA) ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு இந்த நிதியாதரவு கிடைக்கும். இதன்மூலம் கிட்டத்தட்ட 13,000 ஓட்டுநர்கள் பலன் பெறுவர்.
இந்த வழங்குதொகையைப் பெற, லிமோசின் கார் ஓட்டுநர்களும் 13 பேர்வரை அமரும் வசதி கொண்ட சிற்றுந்து ஓட்டுநர்களும் தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கத்தின் சந்தா செலுத்தி வரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்; செல்லத்தக்க தொழில்முறை உரிமத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
அதுபோல, விநியோக ஓட்டுநர்கள் தேசிய விநியோக வெற்றியாளர்கள் சங்கத்தின் சந்தா செலுத்தி வரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்; பெட்ரோலில் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்தி வரவேண்டும்.
இவ்வாண்டு மார்ச் 30ஆம் தேதிக்குள், தன்னுரிமை ஓட்டுநர் (freelance driver) தொழில் மூலமாகவே அவர்கள் தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டி இருக்க வேண்டும். அவர்கள் கொவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதியைப் பெற்றிருக்கக்கூடாது.
அத்துடன், வருமானம், வாகனம், வேலை நடவடிக்கை, சுயதொழில் தகுதிநிலை போன்றவற்றுக்கான சான்றாவணங்களையும் அவர்கள் வழங்க வேண்டும்.
இந்த ரொக்க வழங்குதொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஜூலை 16ஆம் தேதிக்குள் http://ufse.org.sg/Pages/reliefscheme.aspx என்ற இணையப்பக்கம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
டௌன்டவுன் ஈஸ்ட்டில் உள்ள பெகோனியா டெரசில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகப்பிற்குச் சென்று நேரிலும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு செய்துகொண்டு அங்கு செல்லவேண்டும்.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது குறித்து நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று என்டியுசி தெரிவித்துள்ளது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டோர்க்கு, அதன்பின் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் ரொக்க உதவி கிடைக்கும்.
நிதியுதவி பெறத் தகுதியிருந்தும் மேற்குறிப்பிட்ட இரு சங்கங்களின் உறுப்பினர்களாக இல்லாத ஓட்டுநர்கள், அச்சங்கங்களில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராகச் சேர்ந்து, அதன்பின் இந்தத் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
சிற்றுந்து, லிமொசின் ஓட்டுநர்களுக்கு $650 ரொக்க உதவி கிட்டும். பெட்ரோல் அல்லது கலப்பின வாகனத்தைப் பயன்படுத்தும் விநியோக ஓட்டுநர்களுக்கு 400 வெள்ளியும் மோட்டார்சைக்கிள் மூலம் விநியோகத் தொழில் செய்வோர்க்கு 250 வெள்ளியும் வழங்கப்படும்.
அவர்கள் இவ்வாண்டு மார்ச் 1ஆம் தேதிக்குமுன் அச்சங்கங்களின் உறுப்பினராகச் சேர்ந்து இருக்க வேண்டும்.
மார்ச் 1க்குப் பிறகு உறுப்பினரான சிற்றுந்து, லிமொசின் ஓட்டுநர்களுக்கு $660ம் விநியோக ஓட்டுநர்களுக்கு $350ம் மோட்டார்சைக்கிள் மூலம் விநியோகப் பணியில் ஈடுபடுவோர்க்கு $200ம் வழங்கப்படும்.

