சந்தேகப்படும்படியான பொருள் கசிந்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, போலிஸ் அதிகாரிகள் உட்லண்ட்சில் உள்ள ஒரு கொண்டோமினியத்தில் இருந்து கிட்டத்தட்ட நூறு பேரை வெளியேறும்படி உத்தரவிட்டனர்.
கசிந்திருந்த பொருளில் பொதுவாக பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் பொருள்கள் இடம்பெற்று இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
61 ரோஸ்வுட் டிரைவில் எனும் முகவரியில் அமைந்துள்ள ரோஸ்வுட் சூட்ஸ் கொண்டோமினியத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து நேற்றுக் காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
முதல் தளத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் மாடப் பகுதியில் சிறிய அளவில் வேதிப்பொருள் கசிந்திருந்ததைக் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதிலிருந்து சிறு மாதிரி சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட பகுதி, மாசுஅகற்றி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. பிற்பகல் 1.30 மணியளவில் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
முற்பகல் 11.30 மணியளவில் அங்கு ஆறு தீயணைப்பு வண்டிகளும் ஒரு 'ஹஸ்மெட்' வாகனமும் நின்றிருந்ததையும் எவரும் செல்ல முடியாதவாறு அப்பகுதி அடைத்து வைக்கப்பட்டு இருந்ததையும் கூறினார் அந்த கொண்டோமினியத்திற்கு அருகே வசிக்கும் திரு சான் லிம், 26.
"அந்தக் குடியிருப்பிற்கு அருகில் வசிப்பதால் சற்றுக் கவலை அடைந்தேன். எனது வீட்டின் சன்னல்களையும் மூட வேண்டியிருக்குமோ என நினைத்தேன். ஆனால், நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரி என்னிடம் கூறினார்," என்றார் திரு சான்.

