மேலும் பல மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்குப் பரிசோதனை
மருத்துவமனைகளில் உள்நோயாளி சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளைப் பார்க்கச் செல்வோர் 20 நிமிடங்களுக்குமேல் அங்கிருக்க அனுமதிக்கப்படுவர். ஆனால், அதற்குமுன் அவர்கள் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) செய்துகொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெறவேண்டும். சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் நேற்று இந்நடைமுறை தொடங்கிவிட்டது. அலெக்சாண்டிரா மருத்துவமனையில் இன்று முதல் வருகையாளர்கள் 'ஏஆர்டி' பரிசோதனைக்கு உட்பட வேண்டும். டான் டோக் செங் மருத்துவமனையிலும் இந்தப் பரிசோதனை நடைமுறை இடம்பெறவுள்ளது. ஆனால், அது எப்போது தொடங்கும் எனக் கூறப்படவில்லை. 'ஏஆர்டி' பரிசோதனைத் திட்டம் குறித்த பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஆனால் அதுகுறித்த விவரங்கள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்றும் இங் டெங் ஃபோங் மருத்துவமனையும் ஜூரோங் சமூக மருத்துவ மனையும் தெரிவித்தன. உடல்நலம் மிகவும் குன்றிய நோயாளிகள், பேறுகாலத்தில் உள்ள பெண்கள், மனநலக் குறைபாடு உள்ளோர் போன்ற கூடுதல் பராமரிப்பு ஆதரவு தேவைப்படும் நோயாளிகள் ஆகியோருடன் நீண்ட நேரம் தங்க அனுமதிக்கும் விதமாக வருகையாளர்களுக்கான கட்டாயப் பரிசோதனை நடவடிக்கை இடம்பெறுகிறது.
விரைவுப் பரிசோதனை மையத்திற்கு ஊழியர்களை அனுப்ப ஆர்வம்
தேக்காவிலும் ஈசூனிலும் இருக்கும் முன்னாள் வெளிப்புற பேருந்து மையங்கள், சிங்கப்பூரின் முதல் இரு விரைவுப் பரிசோதனை மையங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அருகிலுள்ள சிறு வணிக நிறுவனங்கள், அவ்வப்போதைய கொவிட்-19 பரிசோதனைக்காகத் தங்கள் ஊழியர்களை அங்கு அனுப்ப ஆர்வமாக உள்ளனர். ஆனாலும், சரியான ஏற்பாடுகள் குறித்து அவர்களில் பெரும்பான்மையோர்க்கு உறுதியாகத் தெரியவில்லை. சிலர் தங்களது அக்கறைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த மாதம் நடுப்பகுதியில் இருந்து, உணவு, பானக் கடைகள் போன்ற கொரோனா தொற்றும் அபாயம் அதிகமாக உள்ள சூழல்களில் பணிபுரிவோர் அவ்வப்போது கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேற்பார்வையுடன் சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ள ஏற்பாடு செய்ய இயலாத சிறு வணிகங்களுக்கு ஆதரவு தரும் நோக்கில் இந்த விரைவுப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசியால் கருச்சிதைவு அபாயம் அதிகரிக்குமா? வல்லுநர்கள் விளக்கம்
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனக் கூறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 4,000 கர்ப்பிணிகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவர்களுக்குக் கருச்சிதைவு, கரு வளர்ச்சி பாதிப்பு, குறைப் பிரசவம் போன்றவற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனை பேராசிரியர் டான் ஹாக் கூன் தெரிவித்தார். இதன் தொடர்பில் தங்களது அக்கறையை வெளிப்படுத்தி, ஐந்து பெற்றோர்கள் அம்மருத்துவமனைக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதனிடையே, இம்மாதம் 14ஆம் தேதி அம்மருத்துவமனை கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் தொடங்கியது. இதுவரை 80க்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடப் பதிவுசெய்திருப்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்று பேராசிரியர் டான் சொன்னார். இம்மாதம் 4ஆம் தேதியிலிருந்து கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யலாம் என்று சுகாதார அமைச்சு அறிவித்தது. தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தத் தேவையில்லை என்றும் அமைச்சு தெரிவித்திருந்தது.

