நகரமைப்புத் திட்டங்களைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றக்கூடிய தன்மையும் சிங்கப்பூரில் எளிதாக வேறு பயன்பாட்டுக்காக மாற்றி அமைக்கக்கூடிய நிலமும் இருப்பதன் முக்கியத்துவத்தை கொவிட்-19 பரவல்கா ட்டியுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
மக்கள் வாழும், பணியாற்றும், விளையாட்டில் ஈடுபடும் விதங்களை பல வகையில் கொவிட்-19 சூழல் மாற்றியுள்ளது. அதனால் நீண்டகால நோக்கில், நிலப் பயன்பாடு. நகரத் திட்டமிடுதல் ஆகியவை குறித்த தனது அணுகுமுறையை நாடு மாற்றவேண்டியிருக்கும் என்று திரு லீ கூறினார்.
நேற்று நடைபெற்ற உலக நகரங்கள் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், சிங்கப்பூரின் நீண்டகால நகரத் திட்டமிடுதலைக் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும் நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
கருத்தாக்கத் திட்டம் என்று அழைக்கப்படும் அந்த நீ்ண்ட காலத் திட்டம் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் அதற்கு பின்னரும் சிங்கப்பூரின் நகரமைப்புக்கு வழிகாட்டுகிறது.
இத்திட்டம் பத்தாண்டுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்யப்படும். கடைசியாக திட்டம் 2011ல் மறுஆய்வு செய்யப்பட்டது.
சிங்கப்பூர் இப்போது வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் முறைக்கு மாறி வருவதால், அலுவலகங்களுக்கு எவ்வளவு இடம் தேவை, வேலை இடங்களையும் வீடுகளையும் எவ்வாறு வடிவமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார் திரு லீ.
"அவசரகாலத்தில் விரைந்து மாற்றி அமைக்கக்கூடிய வெற்று இடத்தை ஒதுக்குவது அவசியம் என்று கிருமிப் பரவல் காட்டியது. நிலத்தட்டுப்பாடு உள்ள சிங்கப்பூரிலம் மற்ற பயன்பாடுகளுக்காக எளிதில் மாற்றக்கூடிய நிலம் இருப்பது அவசியம்," என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் குறிப்பிட்டார்.
முதலில் முகக்கவசங்களையும் டிரேஸ்டுகெதர் கருவிகளையும் விநியோகிக்கப் பயன்பட்ட சமூக நிலையங்கள் தற்போது தடுப்பூசி நிலையங்களாக இயங்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நகரங்களை வாழக்கூடிய, இணைக்கப்பட்டிருக்கும் இடங்களாக வைத்திருப்பதன் அவசியத்தையும் கிருமிப்பரவல் காட்டியுள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.
கிருமிப்பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, சிங்கப்பூர் வாழ்க்கையின் பல அம்சங்கள் மாற்றத்துக்கு உள்ளாயின. இதனால் சமூக மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.
பணிசெய்யும் முறைகளில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் நிரந்தரமாகக்கூடும். எப்போதும் அல்லது சில நாட்கள் லீட்டிலிருந்து வேலை செய்வது, இணையம் வழி வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவது அவற்றில் அடங்கும். இதுபோன்ற மாற்றங்களால், அழுத்தமும் அலுப்பும் கூடியது. மனநலனைப் பேணுதல் கவனம் பெற்றது.
மேலும், கிருமிப்பரவலால் சமூக ஏற்றத்தாழ்வுகள் மோசமாகலாம் என்றும் திரு லீ எச்சரித்தார்.
பொருளியலில் சிலதுறைகள் மீட்சி அடைந்துள்ளபோதும் சில துறைகள் இன்னும் தேங்கியுள்ளன.
அத்தியாவசியப் பணியாளர் களுக்கு வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் வசதி இல்லை. மேலும் சிலர் வேலைகளை இழந்துள்ளனர் அல்லது அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதை திரு லீ சுட்டிக் காட்டினார். இவர்களுக்கு, அரசாங்கம் உதவி செய்ய வேண்டியிருந்தது என்றார் அவர்.

