இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் தலைவரும் டன்லப் ஸ்திரீட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அப்துல் கஃபூர் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவருமான ஹாஜி ஏ.ஜி. முஹம்மது முஸ்தபா நேற்று முன்தினம் சாங்கி பொது மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 83. அவர் தன் மகன், மகள், பேரப்பிள்ளைகளை விட்டுச் சென்றார்.
சிங்கப்பூரிலுள்ள 19 இந்திய முஸ்லிம் சங்கங்களை ஒரே கூரையின்கீழ் ஒன்றிணைக்கும் இந்திய முஸ்லிம் பேரவை எனும் கூட்டமைப்பை 1992ஆம் ஆண்டு அமைத்த நிறுவனர்களில் அவர் ஒருவர். அந்தக் கூட்டமைப்பை 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை தலைவராகத் திறம்பட வழிநடத்தினார்.
தேசிய நினைவுச் சின்னமான அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் மாபெரும் மறுசீரமைப்பைக் கடந்த 2000ஆம் ஆண்டு தமது 12 ஆண்டுகாலத் தலைமைத்துவத்தில் முன்னெடுத்த மறைந்த திரு முஸ்தபா, அந்தப் பழம்பெரும் பள்ளிவாசலின் கீழ்த் தளத்தை விரிவு படுத்தி மக்கள் தொழுகைக்காக அந்த இடத்தைப் பயன்படுத்தும் விரிவாக்கத்திற்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கினார்.
"சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அளவுகடந்த விருப்பமும் நிலையான பற்றும் கொண்டவர் திரு முஸ்தபா. குறிப்பாகப் பள்ளிவாசல் மூலம் அத்தகையச் சேவையை அவர் ஆற்றினார். தன்னுடைய சிந்தனையிலும் செயலிலும் வலுவாக இருந்து பணிகள் செய்தார்," என்றார் முன்னாள் மூத்த துணை அமைச்சரும் குவைத்துக்கான சிங்கப்பூர்த் தூதருமான திரு ஜைனுல் அபிதீன் ரஷீத்.
பல இளையர்களைச் சமூகப் பணியாற்ற ஊக்குவித்து தளம் அமைத்துத் தந்தார் திரு முஸ்தபா.
"என் 20 வயது முதல் இன்றுவரை அப்பள்ளிவாசலின் தொண்டூழியராகவும் பல வழிகளில் சமூகத் தொண்டும் ஆற்ற மூலதனமாக இருந்தது திரு முஸ்தபாவின் ஊக்கமும் அவர் புகட்டிய பாடமும்தான்," என்றார் அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டுவரும் 48 வயது திரு அன்வர் அலி.
அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

