செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e45b7c62-e461-4d71-a911-17afe029686b
-

பயண விவரம் பற்றி பொய் உரைத்தவருக்கு 3 வாரம் சிறை

பயணத்துக்குப் பின் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை வேறு இடத்துக்கு பதில் வீட்டில் கழிக்க வேண்டும் என்று விரும்பியதால், பயணப் பற்றுறுதியில் பொய்த்தகவல் அளித்தவருக்கு மூன்று வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனத்தில் நிள அளவாளராகப் பணியாற்றிய விஜயகுமார் ஸீ ஜோசப், 58, பணிநிமித்தம் கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேசியா சென்று வந்தார். சிங்கப்பூர் திரும்புவதற்கு இரு நாட்களுக்கு முன், சேஃப்டிராவல் இணையத்தளத்தில் சிங்பாஸ் விவரத்தைப் பயன்படுத்தி, வேறு இடத்தில் தனிமையில் இருக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.

அச்சமயத்தில் பிஜி, பின்லாந்து, இலங்கை உட்பட 7 நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் தனிமை காலத்தைக் கழிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஏழு நாடுகளுக்கும் சென்று வந்ததாக பயணப் பற்றுறுதியில் தெரிவித்தார் விஜயகுமார். சிங்கப்பூர் வந்தபோது மீண்டும் அவர் குடிநுைழவுத் துறை அதிகாரிகளிடம் பொய்த் தகவல் அளித்து, பற்றுறுதியில் கையயொப்பம் இட்டார்.

குற்றத்துக்காக தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு நேற்று மூன்று வாரம் சிறை விதிக்கப்பட்டது.

நடைபயணியை வேண்டும் என்றே மோதிய டாக்சி ஓட்டுநருக்கு சிறை

ஒரு நடைபயணியின் முழங்கையை டாக்சியின் பக்கக் கண்ணாடியைக் கொண்டு மோதினார் அந்த டாக்சி ஓட்டுநர். நடைபயணி டாக்சியைப் புகைப்படம் எடுக்க முயன்றபோது மீண்டும் டாக்சியால் அவரை மோதினார் அந்த ஓட்டுநர். அதன் தொடர்பில் குஸ்வாரா மாமுட் என்று அழைக்கப்படும் மைக்கல் ஹுய் எனும் அந்த 71 வயது ஓட்டுநருக்கு நான்கு வாரம் சிறைத் தண்டனையும் $800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைக்குப் பின்னர் அடுத்த ஓராண்டுக்கு ஹுய் டாக்சி ஓட்டுநராக தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி ராபர்ட்சன் கீயில் உள்ள இண்டர்காண்டினன்டல் ஹோட்டல் வெளியே சம்பவம் நடந்தது. அப்போது இளம் தம்பதியும் அவர்களின் குழந்தையும் டாக்சியில் இருந்ததாகக் கூறப்பட்டது.

பாலஸ்டியர் சாலையில் போலிசாரை வசைபாடி எதிர்த்தவர் கைது

பாலஸ்டியர் ரோட்டில் நடந்த தகராற்றுக்குப் பின்னர், தகவல் அறிந்து வந்த போலிசாரை வசைபாடி முரண்டுபிடித்த 27 வயது ஆடவர் கைதானார். சம்பவம் 230 பாலஸ்டியர் ரோட்டில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு 2.30 மணிக்கு நடந்தது.

குடித்துவிட்டு பொது இடத்தில் தொல்லை தந்தது, அரசாங்க அதிகாரிக்கு எதிராக வசைச் சொற்களைப் பயன்படுத்தியது, கடமையை ஆற்ற முயன்ற அரசாங்க அதிகாரி மீது வன்முறையைப் பயன்படுத்தியதற்காக ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

குடித்துவிட்டு கார் ஓட்டியதன் தொடர்பிலும் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலிசாரை ஆடவர் வசைபாடி கேலி செய்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதாக ஸ்டாம்ப் இணைய செய்தித் தளம் கூறியது.