சிங்கப்பூரின் ஆகப் பழமையான நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று சுவா சூ காங் ஆலை. இதில் அதிநவீனத் தொழில்நுட்ப அம்சத்தைப் பொருத்தும் மேம்பாட்டுப் பணிக்காக $28.8 மில்லியன் ஒதுக்கப்படுவதாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று அறிவித்தது.
வருடாந்திர மாநாடான 'சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரம் 2021' நேற்று இணையம் வழி நடந்தபோது ஆலையின் மேம்பாட்டுப் பணி குறித்து அறிவிக்கப்பட்டது.
சுவா சூ காங் நீர் சுத்திரிப்பு ஆலையில் அமைந்துள்ள கட்டடங்களும் சாதனங்களும் 1981ஆம் ஆண்டுக்கும் முந்தியவை. இந்நிலையில் புதுப்பொலிவு தரும் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் 2026ல் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்த நிலையில் தண்ணீர் சுத்திகரிப்புக்கான புதிய தொழில்நுட்பங்கள் ஆலையில் அமைந்திடும்.
அத்துடன் உடனுக்குடன் சாதனங்களின் செயல்திறனைக் கண்காணித்து முன்னுரைக்கும் உணரிகள், காணொளி பகுப்பாய்வு திறன்களுடைய கண்காணிப்பு கேமராக்கள் போன்ற அறிவார்ந்த தொழில்நுட்ப அம்சங்களும் பொருத்தப்படும்.
மேற்கு வட்டார நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் தண்ணீரை, நாள் ஒன்றுக்கு 80 மில்லியன் கேலன்கள் எனச் சுத்திகரிக்கும் ஆற்றலை சுவா சூ காங் ஆலை பெற்றுள்ளது.
அதிநவீன தண்ணீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பங்கள் கொண்ட வளாகமாக உருமாறுவது, சுவா சூ காங் நீர் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடு, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றைப் பெரிதும் மேம்படுத்தும் என்றது கழகம்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, நேற்றைய மாநாட்டில் கலந்துகொண்டார். உலகெங்கும் தண்ணீர் பாதுகாப்பு என்பது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு பிரச்சினை என்று தமது தொடக்க உரையில் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, மக்கள்தொகை வளர்ச்சியாலும் பருவநிலை மாற்றத்தாலும் நீர் வளங்கள் மீதுள்ள அழுத்தம் கூடுவதாக அவர் தெரிவித்தார்.
குறைந்த கரியமில வாயு வெளியேற்றத்துடன் நீர் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் சிங்கப்பூர் அதன் தண்ணீர் பாதுகாப்பை மேம்படுத்துவதாகக் கூறப்பட்டது.

