புதிதாக தொடங்கப்பட்டுள்ள மின்னிலக்கப் பயிற்சிக் கழகம் மூலம் பொதுச் சேவை அதிகாரிகளும் தலைவர்களும் தங்களின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்திக்கொள்வதுடன் தங்கள் அமைப்புகளை மின்னிலக்க உருமாற்றம் தொடர்பில் வழிநடத்தும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளலாம். நேற்று புதிதாகத் தொடங்கப்பட்ட 'தி டிஜிட்டல் அகாடெமி'யில் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளுக்குப் பொதுச் சேவை அதிகாரிகள் பதிந்துகொள்ளலாம்.
அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமத்தின் திட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பயிற்சிக் கழகத்தில் ஓராண்டுக்குள் 6,000க்கும் மேற்பட்ட பொதுத் துறை அதிகாரிகள் பயிற்சி பெற்றிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயலி உருவாக்கம், தரவு, பகுப்பாய்வு, இணையப் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் தொடர்பில் 55 பயிற்சி வகுப்புகளைப் பயிற்சிக் கழகம் வழங்குகிறது. அடுத்த ஆண்டு மே இறுதிக்குள் மேலும் 40 பயிற்சி வகுப்புகள் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இணையம் வழி நேற்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கலந்துகொண்டு பேசினார்.
மின்னிலக்க முறையில் தொடர்புகளின் தடமறிதலை நடைமுறைப்படுத்தியது, மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு கற்பது போன்ற கொவிட்-19க்கு எதிரான சிங்கப்பூரின் செயல்பாட்டை அவர் உதாரணம் காட்டினார். பொதுத் துறையின் மின்னிலக்க ஆற்றல்களையும் மின்னிலக்க உள்கட்டமைப்பையும் மேம்படுத்தியதன் பலனை அந்த செயல்பாட்டில் காண முடிந்ததாக அவர் விளக்கினார்.
மின்னிலக்க அரசாங்கத்தை உருவாக்கும் துரித முயற்சியை சிங்கப்பூர் கைவிட முடியாது என்றும் குறைந்தது அடிப்படை மின்னிலக்க அறிவை அனைத்து பொதுச் சேவை பொறுப்புகளிலும் உள்ள அதிகாரிகள் பெற்றிருப்பது அவசியம் என்றும் டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
நேரடியாகவும் இணையம் வழியாகவும் வகுப்புகள் நடத்தப்படும்.

