சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஆகச் சிறந்த ராணுவப் போர்ப் பிரிவாக தொடர்ந்து 18வது முறையாக முதலாவது மின்னற்படைப் பட்டாளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த பிரிவாக அது மொத்தம் 35 முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக அப்பிரிவுக்கு வெளி
நாடுகளுக்குச் சென்று பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தனது வீரர்களின் வேகம், துரிதம் ஆகியவை துளியளவும் குறைந்துவிடாதிருக்க அப்பிரிவு தனது பயிற்சிமுறையை மீண்டும் வடிவமைத்து அதன்படி செயல்பட்டது என்று அப்படைப்பிரிவின் தலைவராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்ற லெஃப்டினெண்ட் கர்னல் கூ காய் சியோங் கூறினார். உதாரணத்துக்கு, வழக்கமாக புருணை காடுகளில் நடத்தப்படும் சில பயிற்சிகள் சிங்கப்பூரிலேயே ஏழு நாட்களுக்கு நடைபெற்றன.
இதன்மூலம் வீரர்களுக்கான பயிற்சியின் தீவிரம், வீரர்களின் போர்த் திறன் ஆகியவை தொடர்ந்து நிலைநாட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். இப்பிரிவு அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று நடைபெறும் ஆயுதப் படைகள் தின அணிவகுப்பின்போது கௌரவிக்கப்படும்.

