முன்களக் காவல் பணி, காவலர் பயிற்சி, கண்காணிப்பு, சமூகத்தைச் சென்றடைதல் போன்ற பல்வேறு அம்சங்களில் உதவ மேலும் அதிகமான போலிஸ் கேமராக்கள், ஆளில்லா வானூர்திகள், பயிற்சி எந்திரங்கள் எனத் தொழில்நுட்ப ரீதியாக சிங்கப்பூர் போலிஸ் படை வலுப்பெறவுள்ளது. நேற்று நடைபெற்ற வருடாந்திர போலிஸ் பணித்திட்டக் கருத்தரங்கில் இது அறிவிக்கப்பட்டது.
போலிஸ் கேமராக்கள் 90,000க்கும் மேற்பட்டவை ஏற்கெனவே பொருத்தப்பட்டுவிட்டதாகவும் அவற்றின் உதவியுடன் 5,000க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் கூறப்பட்டது.
புதிய பொது வீடமைப்பு புளோக்குகள், உணவங்காடி நிலையங்கள், போக்குவரத்துப் பாதைகள் ஆகியவற்றில் மேலும் அதிகமான கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நகர, அக்கம்பக்க வட்டாரங்களில் பொருத்தப்படும் கேமராக்கள், காணொளிப் பகுப்பாய்வு ஆற்றலுடையதாக இருக்கும். எதிர்பாராத கூட்டம், நடத்தையில் வன்முறை போன்றவற்றை உடனே கண்டறியும் திறனை இக்கேமராக்கள் பெற்றிருக்கும்.
அதிகரிக்கப்படும் ஆளில்லா வானூர்திகள் மூலம் கண்காணிப்பு, ரோந்துப் பணி, சம்பவங்களைத் தொலைவிலிருந்து காணுதல் போன்றவற்றுக்குப் பயனாகும்.
புதிய துப்பாக்கிகள், உடலில் அணியக்கூடிய கேமராக்கள் ஆகியவற்றையும் போலிஸ் அதிகாரிகள் பெறவுள்ளனர். சிங்கப்பூர் போலிஸ் படை கொள்ளைநோய் சூழலில் கொண்டிருந்த கடப்பாடு குறித்து கருத்தரங்கின்போது சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் பாராட்டிப் பேசி இருந்தார்.
கொள்கை ஆய்வுக் கழகம் சென்ற ஆண்டு நடத்திய கணக்கெடுப்பை மேற்கோள் காட்டிய அவர், அதில் பங்கேற்றவர்களில் 87 விழுக்காட்டினருக்கு போலிசார் மீது நம்பிக்கை உள்ளது என்று கூறியிருந்ததைப் பகிர்ந்துகொண்டார்.
பொதுவாக சிங்கப்பூர் போலிஸ் படையும் உள்துறைக் குழுவும் சந்திக்கும் சவால்களுக்கிடையே மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள அதிகளவு நம்பிக்கையைக் கட்டிக்காப்பது கடினமென்றாலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
இத்தகைய சவால்களை எதிர்கொள்ள உதவ அதிகாரிகளில் மேலும் பலருக்கு பயங்கரவாதம் தொடர்பான திறன் உத்திப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.
"பொதுமக்களைப் பாதுகாக்கவும் குற்றச்செயல்களை எதிர்க்கவும் நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அதே வேளையில், இனம், சமயம், செல்வம், சமூக அந்தஸ்து என எதையும் பாராமல் நமது பொறுப்பைப் பாரபட்சமின்றி ஆற்றவேண்டும்," என்றார்.

