வெளிநாட்டினர் வேலைவாய்ப்புக் கொள்கைகள் பற்றியும் 'சீக்கா' எனப்படும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு பற்றியும் விவாதிப்பதற்கான சவாலை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) ஏற்பதாக தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் தெரிவித்துள்ளார்.
விவாதத்திற்கு ஆயத்தமாகும் பொருட்டு இவை தொடர்பான கூடுதல் தகவல்களை ஜூலையில் நாடாளுமன்றம் கூடும்போது அரசாங்கத்திடமிருந்து எதிர்க்கட்சி பெறும் என்றும் அவர் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக பொருத்தமான தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்வது குறித்து பிஎஸ்பி முடிவு செய்யும் என்றும் அதனைத் தொடர்ந்து விவாதத்திற்கான தேதியை முடிவு செய்யவேண்டியது மன்ற நாயகரின் பொறுப்பு என்றும் திரு லியோங் கூறியுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள 'எம்ப்ளாய்மெண்ட் பாஸ்', 'எஸ் பாஸ்', வேலை அனுமதி அட்டை போன்றவற்றின் எண்ணிக்கை தொடர்பான கேள்விகளைத் தமது கட்சி எழுப்பும் என்று அவர் கூறினார்.
"நமது வேலைச் சூழல் தொடர்பான எல்லாவித தரவுகளையும் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நாட்டமாக உள்ளது. சில துறைகளில் நியாயத்திற்குப் புறம்பான வேலை நியமனங்கள் காரணமாக நமது உள்ளூர் ஊழியரணியில் வேலைவாய்ப்புப் பற்றாக்குறை நிலவுவது பற்றி வருந்துகிறோம்," என்றார் அவர்.
இது தவிர, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தோர் பொதுவாக இடம்பெற்றிருக்கும் வேலைகள் மற்றும் தொழில்துறைகள் பற்றிய விவரங்களைக் கேட்பது போன்றவை நாடாளுமன்றத்தில் எழுப்பவிருக்கும் கேள்விகளின் வரைவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்டது.
'சீக்கா' எனப்படும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு, சில பிரிவினரால் குறைகூறப்பட்டு வருகிறது.
உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகளை இந்திய நாட்டவர்கள் தட்டிப் பறிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்வதாக குறைகூறப்படும் பிரச்சினையை பிஎஸ்பி பல சந்தர்ப்பங்களில் எழுப்பி இருக்கிறது. இதுபற்றி கடந்த மாதம் மன்றத்தில் பேசிய அமைச்சர் சண்முகம், சீக்கா பற்றி பல கட்டுக்கதைகள் உலவுவதாகக் குறிப்பிட்டார்.
"சீக்கா என்பது பிரச்சினைக்குரியது என்று இங்குள்ள எவராவது கருதினால் அதற்கான தீர்மானத்தை வரைந்து, வெளிப்படையாக விவாதம் செய்வதன் மூலம் சிங்கப்பூரர்கள் அடைந்தது பலனா அல்லது இழப்பா என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்," என்று அப்போது கூறியிருந்தார்.
மேலும், அமைச்சர் சண்முகம் திரு லியோங்கை நோக்கி, "சீக்கா பற்றி விவாதிப்பதற்கான தீர்மானத்தை முன்வைக்குமாறு உங்களை அழைக்கிறேன். சீக்கா பற்றி வெளியான கருத்துகளில் பெரும்பாலானவை பொய் என்பது உங்களுக்குத் தெரியும்," என்றும் குறிப்பிட்டிருந்தார்.

