செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
bf3c2917-2b58-4fb9-b9b9-b8029b49ab97
-
Google News Preferred Icon

டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய

ஆடவருக்குச் சிறை, அபராதம்

விநியோக ஊழியரான வினோத் ராஜ் (படம்), 31, சென்ற ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதியன்று தன் காதலியுடன் டாக்சி ஒன்றில் பயணம் செய்தார். ஆனால் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்ததுடன் டாக்சியின் 52 வயது ஓட்டுநரைப் பலமுறை குத்தினார், உதைத்தார். வினோத்துக்கு நேற்று இரண்டு வாரச் சிறையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வேறொரு சம்பவத்தில் வினோத்தின் மனைவி உதவி கோரி போலிசாரை அழைத்தபோது அதிகாரிகளை நோக்கி வினோத் தகாத சொற்களால் திட்டியதாகவும் கூறப்பட்டது. $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வினோத், தண்டனையை நிறைவேற்ற இம்மாதம் 29ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

சட்டவிரோத பந்தயப்பிடிப்பு,

பாதுகாப்பு விதிமீறல், போதைப்பொருள்

சட்டவிரோதமாகப் பந்தயம் கட்டுதல், பாதுகாப்பு இடைவெளிக்கான விதிகளை மீறல், போதைப்பொருள் குற்றங்கள் ஆகியவற்றின் தொடர்பில் சந்தேக நபர்கள்

11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 20 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட அந்த பத்து ஆண்களும் ஒரு பெண்ணும் ஸியோன் ரோட்டில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பிடிபட்டனர். கைதான எட்டு பேரிடம் மின் சிகரெட்டுகள் இருந்ததாகவும் அவர்கள் விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் அனுப்பப்பட்டனர் என்றும் கூறப்பட்டது.

விசாரணை: ஐந்து நாட்களில் மூன்று வேலையிட உயிரிழப்புகள்

மீன் பிடிப்பு வளாகத்தின் குளத்து நீரில் இருந்த 36 வயது மியன்மார் நாட்டவர் ஒருவர் திடீரென தத்தளிக்கத் தொடங்கினார். சக ஊழியர்கள் அவரைக் குளத்திலிருந்து வெளியே கொண்டு வந்து பின்னர் மருத்துவமனையில் சேர்த்தும் ஆடவர் உயிரிழந்தார். தஞ்சோங் பென்ஜுரு கிடங்கு ஒன்றில் 'ஃபோர்க்லிஃப்ட்' பாரந்தூக்கியை இயக்கிய 31 வயது ஆடவர் ஒருவர், சரக்குகளுக்கு அருகில் நின்றபோது அவை அவர் மீது விழுந்து பின்னர் மருத்துவமனையில் ஆடவர் உயிரிழந்தார். துவாஸ் கட்டடத் தளத்தில் சுமார் 40 மீட்டர் உயரத்திலிருந்து 25 வயது பங்ளாதேஷிய கட்டுமான ஊழியர் கீழே விழுந்து உயிரிழந்தார். இத்துடன் ஜூன் 10க்கும் 14க்கும் இடைப்பட்ட நாட்களில் மூன்று வேலையிட உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டதாக வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம் நேற்று முன்தினம் தெரிவித்தது. சம்பவங்கள் தொடர்பில் மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது. இவ்வாண்டில் 22 வேலையிட உயிரிழப்புகள் நேர்ந்துவிட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.