அனைத்துலக அளவில் சில்லுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 'குளோபல்ஃபவுண்ட்ரீஸ்' அதன் பகுதி மின்கடத்தி (semiconductor) உற்பத்தி ஆற்றலை சிங்கப்பூரில் வளர்த்துக்கொள்ளும் திட்டத்துடன் $5.4 பில்லியன் மதிப்பிலான முதலீடு செய்யவுள்ளது.
சிங்கப்பூரில் கட்டப்படும் நிறுவனத்தின் புதிய ஆலை வழி சுமார் 1,000 பேருக்கு வேலைகள் உருவாக்கித் தரப்படும் என்று நிறுவனம் நேற்று தெரிவித்தது.
இந்த வேலைகளில் சுமார் 95%, கருவித் தொழில்நுட்பர், செயல்முறைத் தொழில்நுட்பர், பொறியாளர் போன்ற உயர்மதிப்புடையவையாக இருக்கும். சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் பங்காளித்துவம், வாடிக்கையாளர்களின் இணை முதலீடுகள் ஆகியவற்றுடன் நிறுவனம் இந்த முதலீட்டைச் செய்யவுள்ளது.
மின்னணுவியல், ரசாயனங்கள், மருந்துத் துறைகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவரும் நிலையில், 'குளோபல்ஃபவுண்ட்ரீஸ்' நிறுவனம் உறுதிசெய்துள்ள இந்த முதலீட்டுத் திட்டமே அண்மைய ஆண்டுகளில் ஆக அதிகமானது.
தற்போது கட்டப்பட்டு வரும் ஆலை, உட்லண்ட்ஸ் வளாகத்தில் அமைந்திருக்கும். 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதன் உற்பத்தி வேலைகளைத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024ன் முற்பாதியில் ஆலை அதன் முழு ஆற்றலில் இயங்கும் என்று கூறப்படுகிறது.