காவலர்களிடம் போலித் தகவல் அளித்ததற்காக 48 வயது ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்படவுள்ளது. ஆடவர் இவ்வாண்டு மார்ச் 6ஆம் தேதியன்று போலிசாரிடம் அளித்த புகாரில், தம்மிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் சக ஊழியரிடமிருந்து $2,800 ரொக்கத்தைத் திருடிவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் திருடியதாகக் கூறப்பட்ட அந்த ஊழியர் வேலையிலிருந்து திடீரென்று நின்றுகொண்டதால் ஆடவர் ஆத்திரமடைந்ததாகவும் போலிசார் அந்த ஊழியரைக் கண்டுபிடித்து அவரை அச்சுறுத்தச் செய்ய வேண்டும் என்பதைத் தன் நோக்கமாகவும் அந்த ஆடவர் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அரசாங்க ஊழியரிடம் போலித் தகவல் அளித்ததற்காக இன்று ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபணமானால் ஆடவருக்கு ஈராண்டுச் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

