தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) மற்றும் ஜிசிஇ வாய்மொழித் தேர்வு நடைெபறும்போது அனைத்து மாணவர்களும் வாய்மொழித் தேர்வாளர்களும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்
முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
அறுவை சிகிச்சை முகக்கவசம் இல்லாத மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் இடத்திலேயே அவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய கிருமிகளை கவனத்தில்கொண்டு கிருமிப்பரவல் அபாயத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி சுமார் 310,000 மாணவர்கள் அதாவது ஏறக்குறைய தகுதிபெற்ற 90 விழுக்காடு மாணவர்கள் தடுப்பூசிக்கு பதிந்து கொண்டுள்ளளர். மறுநாள் பள்ளி திறப்பதற்கு முன்பே ஞாயிற்றுக் கிழமை வரை 297,000 மாணவர்கள் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
மாணவர்களையும் பள்ளி ஊழியர்களையும் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேம்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் தேர்வின்போது அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அமைச்சும் கழகமும் அறிக்கையில் குறிப்பிட்டன.
வாய்மொழித் தேர்வுகளில் முக பாவனைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாது. அதனால் அறுவை சிகிச்சை முகக்கவசங்களை அணிவதால் தேர்வு எழுது வோர் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் கூறின.
இவ்வேளையில் நேரடியாக நடைபெறும் இணைப்பாட நடவடிக்கைகள் ஜூலை மாதம் 12ம் தேதி அன்று மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னர் அறிவிக்கப்பட்ட தேதியை விட ஒரு வாரம் தள்ளிப்போகிறது.

