புக்கிட் மேரா வியூ, பியோ கிரெசண்டில் வட்டாரங்களில் வசிப்பவர்கள், பணியாற்றுபவர்கள், அல்லது அங்கு சென்றவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு பரிசோதனைகளின் முடிவில் ஐந்து பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அவர்கள் ஐந்து பேரும் புக்கிட் மேரா வியூயில் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. அந்த வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் சென்ற திங்கட்கிழமை நிறைவுபெற்றன.
சென்ற ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த பியோ கிரசென்ட் பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.
புக்கிட் மேரா வியூ புளோக்குகள் 116, 117, 118, 119, 124ஏ, 124பி, 125, 126 ஆகியவற்றின் குடியிருப்பாளர்கள், அங்கு சென்று வந்தவர்கள் என மொத்தம் 2,133 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
தொற்று கண்ட ஐந்து பேரில் 20 லெங்கோக் பாருவில் உள்ள உடற்குறையுள்ளோருக்கான நட்பார்ந்த வளாகத்தில் (Enabling Village) பணியாற்றும் 69 வயது துப்புரவுத் தொழிலாளரும் ஒருவர்.
இன்னும் இரண்டு பேருக்கு புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவங்காடி நிலையத் தொற்றுக் குழுமத்துடன் தொடர்பு உள்ளது. மேலும் ஒருவர் 119 புக்கிட் மேரா தொற்றுக் குழுமத்துடன் தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டது.
13 பேருக்கு புதிதாக தொற்று
சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 22 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியதாக சுகாதார அமைச்சு கூறியது.
இவர்களில் 13 பேர் சமூகத்தில் உள்ளவர்கள்; 9 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சமூகத்தில் தொற்று கண்ட 13 பேரில் மூவருக்கு கிருமித் தொற்றிய மற்றவர்களுடன் இதுவரை தொடர்பு ஏதுமில்லை. மற்ற 10 பேரும் தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்புள்ளவர்கள்.
அவர்களில் எட்டு பேர் ஏற்கெனவே தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர். மற்ற இருவரும் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டனர். ஊழியர் தங்குவிடுதிகளில் யாருக்கும் தொற்றில்லை.
சிங்கப்பூரில் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை தற்போது 62,470 ஆகியுள்ளது.
புதிய தொற்றுக் குழுமங்கள்
சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு புதிய தொற்றுக் குழுமங்கள் அறிவிக்கப்பட்டன.
ஒன்று, 90 ரெட்ஹில் குளோசில் உள்ளது. அங்கு 69 வயது மாது உட்பட மூவருக்கு தொற்று கண்டுள்ளது. மற்றொன்று கடந்த 14ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட வெளிநாட்டு இல்லப் பணியாளருடன் தொடர்புடையது.

