தெம்பனிசில் விதிமீறிய இளையர்கள்
தெம்பனிஸ் திடல்களில் சென்றவாரம் கூடைப்பந்து, காற்பந்து விளையாடிய பல இளையர் குழுக்கள், ஐவருக்கு மேல் கூடக்கூடாது எனும் கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறை கட்டுப்பாடுகளை மீறியுள்ளனர். இளையர்கள் விளையாடும் படங்களைத் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங், திடல்களை மூடப் போடப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு அவர்கள் விளையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு விதிமுறைகளை முதல் முறையாக மீறுவோருக்கு $300 அபராதம், இரண்டாம் முறையாக மீறுவோருக்கு $1,000 அபராதம் விதிக்கப்படும் என்பதை அவர் நினைவூட்டினார். அவர்களின் அடையாளத்தைத் தெரியப்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மூலாதார பணவீக்கம் உயர்வு
சிங்கப்பூரின் மூலாதார பணவீக்கம் நான்காவது மாதமாக மே மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 0.8% உயர்ந்தது.
குடியிருப்பு, தனியார் சாலைப் போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்த இந்த மூலாதார பணவீக்கம் ஏப்ரலில் 0.6% ஆக இருந்தது. ஏப்ரலில் 2.1% ஆக இருந்த ஒட்டுமொத்த பணவீக்கம் மே மாதல் 2.4% ஆக உயர்ந்தது என்று வர்த்தக தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது.
சிஓஇ கட்டணங்கள் குறைந்தன
வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான (சிஓஇ) நேற்றைய ஏலக்குத்தகையில் பெரும்பாலான பிரிவுகளில் கட்டணங்கள் குறைந்தன. 1,600சிசி அளவிலான சிறிய ரக கார்களுக்கான சிஓஇ $48,510லிருந்து $47,821ஆகக் குறைந்தது.
1,600சிசிக்கு மேற்பட்ட பெரிய ரக கார்களுக்கான சிஓஇ $60,109லிருந்து $56,032ஆனது. மோட்டார்சைக்கிள்கள் தவிர மற்ற வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ $61,112.லிருந்து குறைந்து $58,001, ஆனது. வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ $37,002லிருந்து குறைந்து $37,00 ஆனது. ஆனால், மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் $8,703லிருந்து $8,50ஆக குறைந்தது.
வரிசெலுத்தாத சிகரெட் பறிமுதல்
ஈசூனில் இரண்டு லாரிகளில் இருந்து 2,982 பெட்டிகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டதுடன் 21 முதல் 48 வயதுக்குட்பட்ட நான்கு சிங்கப்பூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவற்றுக்கான மொத்த வரியும் பொருள் சேவை வரியும் முறையே $254,660, $20,430 ஆகும். மூவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
2025ல் 437,000 பணக்காரர்கள்
சிங்கப்பூரில் மில்லியன் வெள்ளி வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை 2025ல் 62% உயர்ந்து 437,000 ஆகக்கூடும் என்று கிரெடிட் சுவிஸ் வங்கி கூறியுள்ளது. ஒப்புநோக்க 2020ல் நாட்டில் 270,000 பேரிடம் மில்லியன் வெள்ளி இருப்பு இருந்தது. கொவிட்-19 பரவலுக்குப் பின்னர் நிதித் துறையின் முக்கிய நகரங்கள் மீட்சி அடையும்போது இது நடக்கக்கூடும் என்று வங்கி அதன் 2021 உலகளாவிய சொத்து அறிக்கையில் கூறியது. கடந்த ஆண்டு சிங்கப்பூர் மக்கள்தொகையில் 5.5 விழுக்காட்டினர் மில்லியன் வெள்ளி வைத்திருந்த பணக்காரர்கள் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
பொருளியல் ஏற்றதாழ்வை மதிப்பிடும் ஜினி எண் கெழு (coefficient) சிங்கப்பூரில் 2020ல் 78.3ஆக இருந்தது. இது ஜப்பான், தென் கொரியா, தைவானைவிட வெகு அதிகம்.
'எஸ்ஜி எனேபலிங் வில்லேஜ்'ஜில் பணிபுரியும் ஊழியர்கள் -180 பேருக்கு பரிசோதனை
'எனேபலிங் வில்லேஜ்'இல் பணிபுரியும் ஒரு துப்புரவுப் பணியாளருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து, அங்குள்ள ஊழியர்கள் சுமார் 180 பேர் பரிசோதிக்கப்படுவர் என்று எஸ்ஜி எனேபல் தனது ஃபேஸ்புக் பதிவில் நேற்று கூறியது. ரெட்ஹில்லில் உள்ள அந்த சமூக வணிக மையத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள சோதனை நிலையங்களில் பரிசோதனைக்குச் சென்றதாக அது கூறிற்று.

