உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிக்கை
சிங்கப்பூருக்கு பயங்கரவாத மிரட்டல் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கொவிட்-19 சூழலில் பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து இணையத்தில் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருவதாக அது தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கு உடனடி பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய திட்டவட்டமான தகவல் எதுவும் இப்போதைக்கு வேவுத்துறை மூலம் தெரிய வரவில்லை என்றாலும் இரண்டு சிங்கப்பூர் இளையர்கள் அரங்கேற்றவிருந்த பயங்கரவாதத் தாக்குதலை தான் தவிர்த்துவிட்டதை அந்தத் துறை சுட்டியது.
அந்தச் சம்பவங்கள் சுய தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக் கொண்ட தனிப்பட்டவர்களால் ஏற்படக்கூடிய மிரட்டல் உண்மையிலேயே இருந்து வருகிறது என்பதையே காட்டுவதாக 'சிங்கப்பூர் பயங்கரவாத மிரட்டல் மதிப்பீட்டு அறிக்கை' என்ற தன் அறிக்கையின் மூன்றாம் பதிப்பில் அந்தத் துறை தெரிவித்து இருக்கிறது.
இந்த அறிக்கை ஒவ்வொரு இரண்டாண்டுக்கும் ஒரு முறை வெளியிடப்படுகிறது.
சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் நிலவும் பாதுகாப்புச் சூழலை எடுத்துச் சொல்லி சிங்கப்பூரர்களை விழிப்பூட்டுவது அந்த அறிக்கையின் நோக்கம்.
உள்ளூரில் பெரும்பாலும் இணையம் மூலம் சுயமாக தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொள்ளும் தனிப்பட்டவர்கள் மூலமாகவே பயங்கரவாத மிரட்டல் உருவாவதாக அந்தத் துறை சுட்டியது.
ஐஎஸ்ஐஎஸ், அல்காய்தா போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் மரணமடைந்துவிட்டாலும் அவற்றுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றாலும் அவை மீள்திறனுடன் கூடியவை என்பது தெரியவந்துள்ளது.
கொவிட்-19 சூழ்நிலையில் அந்த அமைப்புகள் சமூக ஊடகத்தில் தங்கள் பிரசார, ஆட்சேர்ப்பு முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றன என்பதை அந்தத் துறை சுட்டியது. சிங்கப்பூரில் பயங்கரவாதம் தொடர்பான நடத்தைகளுக்காக 2015 முதல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 54 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களில் 32 சிங்கப்பூரர்கள், 12 வெளிநாட்டிர் உள்ளிட்ட 44 பேர் சுயமாக தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக் கொண்டவர்கள் என்று அறிக்கை குறிப்பிட்டது.
2019 ஜனவரி முதல் தடுத்து வைப்பு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களில் 10ல் 9 பேர்- அதாவது 16 பேரில் 14 பேர் சுயமாக தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொண்டவர்கள் என்பதையும் இந்தத் துறை சுட்டியது.
அவர்களில் 10 பேர் சிங்கப்பூரர்கள் நான்கு பேர் வெளிநாட்டி னர் ஆவர்.