பேருந்து ஒன்றில் ஒரு மாதை வசைபாடி இனவாத ரீதியில் அவமதித்த, அவதூறாக பேசிய ஒரு மாதுக்கு நேற்று நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சித்தி ஆயிஷா ஜஃபார், 40, என்ற அந்த மாது, திருவாட்டி தனலட்சுமி செல்வம், 33, என்ற மாதை வசைபாடியபோது 'முட்டாள் இந்தியர்' என்று குறிப்பிட்டார்.
அந்தச் சம்பவத்தைக் காட்டும் இரண்டு காணொளிகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன.
இணையம் மூலம் முன்னிலையான அந்த மாது அப்போது தன் தலையைத் தாழ்த்திக்கொண்டார்.
வழக்கை விசாரித்து தண்டனை விதித்த மாவட்ட நீதிபதி, இத்தகைய குற்றச்செயலுக்கு நம் சமூகத்தில் இடமே கிடையாது என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் சென்ற ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி நிகழ்ந்தது. திருவாட்டி தனலட்சுமி துவாஸ் பேருந்து சந்திப்பு நிலையத்தில் எண் 182 பேருந்தில் ஏறினார்.
ஒலிச்சாதனத்தைக் காதில் பொருத்திக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு வந்தார்.
அப்போது அவரைச் சுட்டிக்காட்டி சித்தி ஆயிஷா முறைத்தார். பாதிக்கப்பட்ட மாது எடுத்த இரண்டு காணொளிகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன.
'உன் இதயமும் கறுப்பு, எல்லாமே கறுப்பு; முட்டாள் இந்தியர்கள், நீ ஓர் இந்தியர், அட்டைக் கறுப்பு; உன் நிறத்தை வெறுக்கிறேன்; உன் முகத்தைப் பிடிக்கவில்லை' என்று அந்த மாது கூறியதை ஒரு காணொளி காட்டியது.
திருவாட்டி தனலட்சுமியை சிறுபான்மையினத்தவர் என்று சித்தி ஆயிஷா திட்டியதும் ஒரு காணொளியில் தெரிந்தது.
பாதிக்கப்பட்ட மாது போலிசை அழைத்தார். சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டருக்கு அருகே பேருந்தை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் அவர் கூறினார் என்று நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

