மிகுந்த கவலையளிக்கும் உருமாறிய 'டெல்டா' கொவிட்-19 கிருமியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை நாங்கள் தொடர்கிறோம். அது வேகமாகப் பரவுவதால், கொரோனா பரவலை முற்றிலும் தடுப்பது கடினம். மாறாக, நாங்கள் தீவிரமானதோர் உத்தியைக் கடைப்பிடித்து வருகிறோம் - கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே தனிமைப்படுத்துவதற்கு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண பல முயற்சிகளை எடுக்கிறோம்; ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பரிசோதிக்கிறோம். பெரிய அளவில் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகும் அபாயத்தைக் குறைப்பதே எங்கள் நோக்கம்.
கொரோனா பரவல் தொடங்கி 18 மாதங்கள் கடந்துவிட்டதால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அனைவரும் கேட்பது இதுதான்: கிருமிப் பரவல் எப்போது, எப்படி ஒரு முடிவுக்கு வரும்?
நிரந்தர நோயாகலாம்
கொவிட்-19 ஒருபோதும் மறைந்துவிடாது தொடர்ந்து இருக்கலாம் என்பதே கவலைதரும் செய்தி. ஆனால், அச்சூழலிலும் கூட, நம்மால் இயல்பாக வாழ முடியும் என்பதே இதில் உள்ள நற்செய்தி. கொவிட்-19 ஒரு நிரந்தர நோயாக மாறும் சாத்தியம் அதிகமாக இருப்பதையே இது குறிக்கின்றது. ஆனால், இதன் பொருள் என்ன?
கிருமி தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும்; அதனால், அது நம் சமூகத்தில் தொடர்ந்து உலவி வரும். இதுபோன்ற நிரந்தர நோய்க்கு, இன்ஃபுளுவன்சா எனப்படும் சளிக்காய்ச்சல் ஓர் எடுத்துக்காட்டு.
ஆண்டுதோறும், பலருக்கும் சளிக்காய்ச்சல் ஏற்படுவதுண்டு. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் சிறிதளவு மருந்துகளுடன் அல்லது மருந்துகள் அறவே இன்றி குணமடைந்துவிடுகின்றனர். ஆனால், ஒரு சிறுபான்மையினர், குறிப்பாக முதியவர்களும் மற்ற நோய்களைக் கொண்டவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படலாம்; அவர்களில் சிலர் இறக்கவும் நேரிடலாம்.
ஒரு பெரிய நாட்டில், சளிக்காய்ச்சலுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் சளிக்காய்ச்சலுக்காக ஆண்டுதோறும் நூறாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்; அவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் மரணமடைகின்றனர்.
ஆனால், சளிக்காய்ச்சலால் கடுமையாக நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக இருப்பதால், மக்கள் அதனுடன் வாழப் பழகிக்கொண்டுள்ளனர். சளிக்காய்ச்சல் காலத்திலும்கூட, எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டோ, ஆண்டுக்கொருமுறை சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொண்டோ, அவர்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்கும், அதே போன்ற அணுகுமுறையை நாம் பின்பற்றலாம். நம்மால் அதனை முற்றிலும் ஒழிக்க முடியாது. ஆனால், சளிக்காய்ச்சல், கை, கால், வாய்ப்புண் நோய், அம்மை நோய் ஆகியவற்றைப் போல, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத ஒன்றாய், நம்மால் கொரோனா பரவலை மாற்றமுடியும்; இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியும். இவ்வாறு செய்வதே, வரும் மாதங்களில் நமது முன்னுரிமையாக இருக்கும். எங்களிடம் ஏற்கெனவே விரிவானதொரு திட்டம் உள்ளது.
தடுப்பூசி போடுவது முக்கியம்
முதலில், தடுப்பூசி. இவ்வாண்டு மே 31 அன்று ஒளிபரப்பான பிரதமரின் உரையில், மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கினர், ஜூலை மாதத் தொடக்கத்திற்குள், குறைந்தது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தாம் எண்ணம் கொண்டிருப்பதாக அவர் கூறினார். அந்த இலக்கை நோக்கி நாம் சீராகச் சென்றுகொண்டிருக்கிறோம். விநியோகத்தில் எந்தவொரு தடையும் இல்லையெனில், தேசிய நாளுக்குள் மக்கள்தொகையில் குறைந்தது மூன்றில் இரு பங்கினர் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டுக்கொள்ளச் செய்வதே நமது அடுத்த இலக்கு.
விநியோகத்தைத் துரிதப்படுத்தி, தடுப்பூசி போடும் பணிகளை விரைவாக மேற்கொள்ள நாங்கள் பணி ஆற்றி வருகிறோம்.
சான்றுகள் தெளிவாக உள்ளன: கிருமித்தொற்று அபாயத்தைக் குறைப்பதிலும் கிருமிப் பரவலைத் தடுப்பதிலும் தடுப்பூசிகள் செயல்திறன்மிக்கதாக விளங்குகின்றன. ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அதனால் ஏற்படக்கூடிய கடுமையான அறிகுறிகளைத் தடுக்க தடுப்பூசிகள் உதவும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடையே பதிவான கிருமித்தொற்று விகிதம், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைவிட 30 மடங்கு குறைவு என்பதை இஸ்ரேலின் அனுபவம் புலப்படுத்துகிறது. அதுபோல, தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் பத்து மடங்கு குறைவு.
சிங்கப்பூரில் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டுக்கொண்டபோதிலும், ஏறக்குறைய 120 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் மிதமான அறிகுறிகள் தென்பட்டன அல்லது எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை. அவர்களில் சிலர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் மருத்துவமனைகளிலோ தாதிமை இல்லங்களிலோ வசிக்கவில்லை. மாறாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில், சுமார் 8 விழுக்காட்டினருக்குக் கடுமையான அறிகுறிகள் தோன்றின.
அதிகளவிலான பாதுகாப்பைத் தக்கவைத்துக்கொள்ளவும், தற்போதைய தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாத வகையில் உருமாறும் புதிய கிருமி வகைகளை எதிர்த்துத் தற்காக்கவும், நோய் எதிர்ப்பாற்றலை மேலும் அதிகரிப்பதற்கான தடுப்பூசிகள் வருங்காலத்தில் தேவைப்படலாம். விரிவான, பல்லாண்டுகால தடுப்பூசித் திட்டத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம், நம்மால் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதை முதற்கட்டச் சான்றுகள் புலப்படுத்துகின்றன. இஸ்ரேலின் அனுபவம் இதனை மெய்ப்பிக்கின்றது. அந்நாட்டு மக்களில் 60 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் அங்குதான் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் ஆக அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இஸ்ரேலில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வயதுப் பிரிவினரிடத்திலும், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விகிதம் தினமும் 100,000 பேருக்கு 0.3 பேர்; மரணம் அடைந்தோர் விகிதம் 100,000 பேருக்கு 0.1 பேர்.
ஒப்புநோக்க, அமெரிக்காவில் 2018/19 ஆண்டுகளில் சளிக்காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விகிதம் தினமும் 100,000 பேருக்கு 0.4; மாண்டோர் விகிதம் 100,000 பேருக்கு 0.03. 2017/18 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான சளிக்காய்ச்சலின் போது அவ்விகிதங்கள் முறையே 0.67, 0.05 என்று பதிவாயின.
இஸ்ரேலில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் அதிகமாக இருப்பதால் அந்த நாட்டின் கொவிட்-19 சூழல், அமெரிக்காவில் பதிவான சளிக்காய்ச்சல் விகிதத்தை நெருங்கியுள்ளது. இவை மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன.
பரிசோதனை எளிதாகும்
இரண்டாவதாக, பரிசோதனையும் கண்காணிப்பும் தொடர்ந்து தேவைப்படும். ஆனால், அவற்றின் நோக்கம் மாறுபட்டிருக்கும். கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரை, குறிப்பாக, கவலை அளிக்கக்கூடிய உருமாறிய கிருமிகளால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காண, நம் எல்லைகளில் தீவிரமான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும்.
உள்ளூரைப் பொறுத்தவரை, பரிசோதனைகள், கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஒரு கருவியாக மட்டுமல்லாமல், நிகழ்ச்சிகள், சமூக நடவடிக்கைகள், வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை பாதுகாப்பாக இடம்பெறுவதை உறுதிசெய்யத் துணைபுரியும்; குறிப்பாக, கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களிடம் கிருமி பரவுவதையும் குறைக்கும்.
பல்படியத் தொடர்வினைப் (PCR) பரிசோதனைகளை மட்டும் நாம் சார்ந்திருக்க முடியாது. அவை அசெளகரியமாக இருப்பதுடன், பரிசோதனை முடிவுகள் வெளிவர பல மணி நேரம் பிடிக்கலாம். கொவிட்-19 பரிசோதனைகள் விரைவானதாகவும் எளிமையானதாகவும் இருக்கவேண்டும். சுயபரிசோதனைகள் உட்பட ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைகளை நாம் பலதுறை மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள், மருந்துக் கடைகள் ஆகியவற்றுக்கு மட்டுமல்லாமல் முதலாளிகளுக்கும் வளாக உரிமையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறம்.
சுவாசப் பரிசோதனைகள் போன்ற ஓரிரு நிமிடங்களில் முடிவுகளை அளிக்கக்கூடிய, மேலும் விரைவான பரிசோதனைக் கருவிகளும் அறிமுகம் காணவிருக்கின்றன. அவை எச்சில், சளி மாதிரிகளைப் பயன்படுத்துவது இல்லை. கூடிய விரைவில் விமான நிலையம், கடல் துறைமுகம், அலுவலகக் கட்டடங்கள், கடைத்தொகுதிகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகியவை இந்தப் பரிசோதனைகளைப் பயன்படுத்தி ஊழியர்களையும் வருகையாளர்களையும் பரிசோதிக்கலாம்.
கழிவுநீர்ப் பரிசோதனையும் உண்டு. வெளிநாட்டு ஊழியர் விடுதிகள், மாணவர் விடுதிகள் அல்லது குடியிருப்புப் பேட்டைகளில் மறைந்திருக்கும் கிருமித்தொற்றைக் கண்டுபிடிப்பதில் இது பலனளிக்கிறது.
சிகிச்சை முறைகள் மேம்படும்
மூன்றாவதாக, உலகம் முழுவதும் உள்ள அறிவியல் வல்லுநர்கள், கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று, செயல்திறன்மிக்க சிகிச்சை முறைகள் பல நம்மிடம் உள்ளன. சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட இறப்பு விகிதம் உலகளவில் மிகக் குறைவானதாய் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
கொரோனா பரவத் தொடங்கி 18 மாதங்களான பிறகு, கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தரமான சிகிச்சையளிக்கவும், அவர்களை விரைவாகக் குணப்படுத்தவும், நோய்ப் பரவலைக் குறைக்கவும், நோய் கடுமையாவதையும் உயிரிழப்பையும் தடுக்கவும் நம்மிடம் பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
சுகாதார அமைச்சு, இந்த மேம்பாடுகளை அணுக்கமாகக் கண்காணித்து வருவதுடன், நம்மிடையே போதுமான அளவில் இவற்றுக்கான மருந்துகள் இருப்பதையும் உறுதிசெய்கிறது. நம் மருத்துவ ஆய்வாளர்கள், புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கும் முயற்சிகளில் துடிப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது அவசியம்
இறுதியாக, நாம் கொவிட்-19 தொற்றுடன் வாழ முடியுமா என்பது, சிங்கப்பூரர்கள் எந்த அளவுக்கு அதனை நிரந்தர நோயாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையும், நம் அனைவரின் ஒருமித்த வாழ்வியல் முறைகளையும் பொறுத்திருக்கிறது.
நாம் அனைவரும் நல்ல தனிமனிதச் சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடித்தால், கிருமி தொற்றும் சாத்தியம் நம்மிடையே குறைவாக இருக்கக்கூடும்.
ஒருவருக்கொருவர் பரிவுடன் நடந்துகொண்டு, உடல்நலமில்லாதபோது கூட்டங்களைத் தவிர்த்தால், நம்மால் கிருமிப் பரவலைக் குறைக்கமுடியும். நாம் அனைவரும் இந்தச் சுமையை ஒற்றுமையாகத் தாங்கினால் - ஊழியர்கள் உடல்நலமில்லாதபோது வீட்டில் இருந்து தங்கள் சக ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்து இருத்தல்; வீட்டில் இருக்கும் ஊழியர்களை முதலாளிகள் தவறாகப் பார்க்காமல் இருத்தல் - நம் சமூகம் மேலும் பாதுகாப்பாக இருக்கும்.
புதிய இயல்புநிலையை நோக்கி...
தடுப்பூசி போடுதல், பரிசோதித்தல், சிகிச்சையளித்தல், சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை, வருங்காலத்தில் ஒருவரை கொரோனா தொற்றும்போது, நமது அணுகுமுறை பேரளவு மாறுபட்டிருக்கலாம் என்பதையே புலப்படுத்துகின்றன.
புதிய இயல்புநிலை, ஒருவேளை இவ்வாறு அமையலாம்:
முதலாவதாக, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டில் இருந்தபடியே குணமடையலாம். ஏனெனில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, பெரும்பாலும் மிதமான அறிகுறிகளே தோன்றும். கிருமி தொற்றியவரைச் சுற்றியிருப்போரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், கிருமிப் பரவல் அபாயம் குறைவாகவே இருக்கும். சுகாதாரப் பராமரிப்புத் துறை மீதான பளு அதிகமாகிவிடும் என்று நாம் அதிகம் கவலைப்படவேண்டியதில்லை.
இரண்டாவதாக, கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படும் ஒவ்வொரு முறையும், நாம் பெரிய அளவில் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியவோ, மக்களைத் தனிமைப்படுத்தவோ தேவை இல்லாமல் போகலாம். பலதரப்பட்ட விரைவான, எளிமையான கொவிட்-19 பரிசோதனைகளைக் கொண்டு, மக்கள் தங்களை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளமுடியும். கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தால், அவர்கள் பல்படியத் தொடர்வினைப் பரிசோதனை மூலம் அதனை உறுதிப்படுத்திக்கொண்டு, தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
மூன்றாவதாக, ஒவ்வொரு நாளும், கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையைக் கண்காணிப்பதை விட, அவற்றால் ஏற்படும் விளைவுகளில் கவனம் செலுத்துவோம்: எத்தனை பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளனர்; எத்தனை பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; எத்தனை பேருக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுகிறது, முதலானவை. இது, நாம் இப்போது சளிக்காய்ச்சலைக் கையாள்வது போன்றது.
நான்காவதாக, பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளைப் படிப்படியாகத் தளர்த்தி, பெரிய அளவிலான ஒன்றுகூடல்களையும், தேசிய தின அணிவகுப்பு, புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகளையும் மீண்டும் தொடங்கலாம். தொழில்கள், தங்கள் செயல்பாடுகள் தடையின்றி தொடரும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கும்.
ஐந்தாவதாக, நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அதை நிரந்தர இயல்புநிலையாக மாற்றி இருக்கும் நாடுகளுக்கேனும் நாம் மீண்டும் பயணம் மேற்கொள்ளலாம். நாடுகள், ஒன்று மற்றொன்றின் தடுப்பூசிச் சான்றிதழ்களை அங்கீகரிக்கும். பயணிகள், குறிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், பயணத்திற்குமுன் பரிசோதனை மேற்கொண்டு, 'கிருமித்தொற்று இல்லை' என்று உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் செல்லும் நாட்டில் தடைக்காப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தில் நாம் எட்டிய மைல்கல்லுடன், இப்புதிய இயல்புநிலைக்கு மாறுவதற்கான திட்டம் ஒன்றையும் உருவாக்கி வருகிறோம். ஆனாலும், கொவிட்-19க்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நிச்சயமற்றதாக அமையும் என்பதை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்.
இவ்வேளையில், கொரோனா பரவலையும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் கட்டுக்குள் கொண்டுவர, முன்னெச்சரிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும்.
ஒவ்வொரு கிருமிப் பரவலும் கடந்துபோகும் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. நாம் எட்ட விரும்பும் இறுதிக்கட்ட நிலையை விரைவில் அடைவதற்கு, நமது ஆற்றல், வளங்கள், கற்பனைத்திறன் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தவேண்டும்.
இறுதியில், அறிவியலும் மனித நுண்ணறிவும் கொவிட்-19 கிருமியை நிச்சயம் வீழ்த்திவிடும். ஒற்றுமையும் சமூகப் புரிந்துணர்வும் நம்மை அந்த நிலைக்கு விரைவில் இட்டுச் செல்லும். இதற்கு, நாம் அனைவருமே நம் பங்கை ஆற்றவேண்டும்.

