இல்லத் தனிமை உத்தரவுக்குப் பதில் அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளவும் பெரிய ஒன்றுகூடலில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படலாம்
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு வீட்டில் தங்கியிருக்க வேண்டிய உத்தரவு நீக்கப்படலாம். தடுப்பூசி போட்டுக்கொண்டோர் வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லவும் சிங்கப்பூரில் பெரிய அளவிலான ஒன்றுகூடல்களில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவ்வாண்டு தேசிய தினத்திற்குள் தனது மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கினர்க்குத் தடுப்பூசி போட சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
எல்லாக் காலங்களிலும் ஏற்படக்கூடிய, நிரந்தர நோயாக கொவிட்-19 இருந்துவிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதன்மூலம் கொரோனா தொற்றுடன் இயல்பாக வாழ சிங்கப்பூர் திட்டமிட்டு வருகிறது என்று கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தது.
அதாவது, சிங்கப்பூரர்கள் உட்பட சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அடிக்கடி கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளலாம் எனச் சொல்லப்படுகிறது.
"அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது பயணத்தையும் நம்மால் மீண்டும் தொடங்க இயலும். தடுப்பூசி போட்டுக்கொண்டோர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அல்லது சிங்கப்பூர் திரும்பும்போது சில சலுகைகள் வழங்கப்படலாம்," என்று பணிக்குழுவின் இணைத் தலைவரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.
"எடுத்துக்காட்டாக, வெளிநாட்டிற்குச் சென்று திரும்பும் சிங்கப்பூரர்கள் உட்பட தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ள வேண்டி இருக்கலாம்," என்றார் அவர்.
இதனிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான பொதுச் சுகாதார நெறிமுறைகளை அரசாங்கம் திருத்தியமைக்கும் என்று நிதி அமைச்சரும் பணிக்குழுவின் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங், செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
"தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டும் பங்கேற்கும் பெரிய அளவிலான ஒன்றுகூடல்களை அனுமதிக்க முடியும்; அச்சூழல்களில் சமூக இடைவெளி விதியையும் தளர்த்த இயலும்," என்று திரு வோங் கூறினார்.
தடுப்பூசி அவசியம்: பிரதமர் வலியுறுத்து
கொவிட்-19 கிருமியுடன் வாழ தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியமான உத்தி என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். கொரோனாவை நம்மால் அழித்து ஒழிக்க முடியாது என்றாலும் சளிக்காய்ச்சலைப் போல அதனைச் சமாளிக்க முடியும் என்றும் ஃபேஸ்புக் பதிவு வழியாக அவர் கூறி இருக்கிறார். தடுப்பூசியால் தொற்றை முழுமையாகத் தடுக்க முடியாது போனாலும் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்படுவதில் இருந்து அது நம்மைக் காக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அதிக நடவடிக்கைகளைத் தொடங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

