சிங்கப்பூரர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய இணையச் செயல் திட்டங்கள், புத்தகப் பரிந்துரைகள், இரு வழி நூலக இணைய ஆய்வுப் பயணங்கள் முதலான பலவற்றோடு இந்த ஆண்டு வாசிப்பு விழா நடக்கிறது.
தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர விழாவான இந்த விழா, ஜூன் 25 முதல் ஜூலை 18 வரை இடம்பெறும். அதில் 60க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ''மறுதொடக்கம்' என்ற கருப்பொருளுடன் கூடிய இந்த ஆண்டு விழாவில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.
விழா தொடக்கத்தையொட்டி ஏறத்தாழ 6 நிமிடக் காணொளி, தேசிய வாசிப்பு இயக்க ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஒளியேறுகிறது.
அதில் நான்கு உள்ளூர் மற்றும் வட்டார நூலாசிரியர்களுடன் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தனது காணொளிச் செய்தியைப் பகிர்ந்துகொள்வார்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் இந்த ஆண்டு விழாவில் வாசிக்க பரிந்துரைக்கப்படுகின்றன.
அந்தப் புத்தகங்கள் பற்றி நூலக வாரியத்தின் https://mobileapp.nlb.gov.sg/ என்ற செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு நடக்கும் ஏழாவது நூல் வாசிப்பு விழாவில் முக்கியமான சிறப்பம்சமாக நூலக இணைய ஆய்வுப் பயணம் இடம்பெறுகிறது.
ஜூலை நடுப்பகுதி முதல் செப்டம்பர் வரை அதில் பொது மக்கள் கலந்துகொள்ளலாம்.
விழாவில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
'படைப்பாற்றல் மிக்க தொழில் முனைவராவது எப்படி' என்ற தலைப்பில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் தொழில்முனைவர்கள் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
கவிஞர் கபிலன் வைரமுத்து தனது கவிதை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதோடு மெய்நிகரி என்ற நாவல் பற்றியும் கருத்துகளை நாளை சனிக்கிழமை பகிர்ந்துகொள்வார்.
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற சோ. தர்மன் தனது 'சூல்' என்ற நாவல் பற்றி ஞாயிற்றுக்கிழமை வாசகர்களுடன் உரையாடுவார்.
ஜூலை 3ஆம் தேதி கபிலன் வைரமுத்துவுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி, புனைவு இலக்கியம் படைப்பது எப்படி என்பது பற்றி சோ. தர்மன் பயிலரங்கில் உரையாடும் நிகழ்ச்சி ஜூலை 4ஆம் தேதி நடக்கிறது.
வாசகர்கள் ஜூலை 10ஆம் தேதி சனிக்கிழமை தமிழ் மேடை நகைச்சுவை விருந்தைச் சுவைக்கலாம்.
'நீங்களும் ஒரு நடிகராகலாம்' என்ற நிகழ்ச்சி ஜூலை 11ஆம் தேதி நடக்கும்.
மக்கள், சமூகங்கள், நாடுகள் ஆகியவற்றின் அடையாளங்களை ஊடகங்கள் உண்மையாகச் சித்தி ரிக்கின்றனவா என்பதை அலசும் ஒரு நிகழ்ச்சி ஜூலை 11 ஆம் தேதி இடம்பெறும்.
சிறுகதையிலிருந்து திரைக்கதை வசனத்தை உருவாக்குவது எப்படி என்பதை ஜூலை 18ஆம் தேதி நடக்கும் ஒரு பட்டறையின் மூலம் வாசகர்கள் தெரிந்துகொள்ளலாம்.
புரவலர்கள் மேல் விவரங்களுக்கு www.go.gov.sg/readfest21 என்ற இணையத் தளத்திற்குச் செல்லலாம்.
அங்கு அவர்கள் தங்களைப் பதிந்துகொள்ளவும் முடியும் என்று நூலக வாரியம் தெரிவித்து உள்ளது.