இல்லக் காப்புறுதி பாதுகாப்பு சந்தா 10% குறையும்

இல்லக் காப்புறுதி பாதுகாப்பு சந்தா 10% குறையும்

2 mins read
cd0aec0f-ad60-4b7c-8ae9-39fd966303a1
-

மத்திய சேம நிதி உறுப்பினர்களான 540,000க்கும் மேற்பட்டோருக்கு ஜூலை 1 முதல் சேம நிதி இல்ல பாதுகாப்பு காப்புறுதிக்கான சந்தா தொகை 10% குறையும்.

முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பாக இருக்கிறது என்பதாலும் சந்தாதாரர்கள் விடுக்கும் கோரிக்கை அளவுகள் காரணமாகவும் தான் சந்தாவைக் குறைப்பதாக சேம நிதிக் கழகம் தெரி வித்தது.

வீட்டுக் கடனை அடைப்பதற்கு முன்னதாக ஏற்படக்கூடிய மரணம், முற்றிய நோய்கள், முற்றிலும் செயலிழந்து விடுவது ஆகியவற்றில் இருந்து சேம நிதி உறுப்பினர்களையும் அவர்களின் குடும்பங்களையும் இந்தக் காப்புறுதித் திட்டம் பாதுகாக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு பெற்ற வீட்டு உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைகளின் பேரில் சென்ற ஆண்டில் அவர்களுக்கு $83.8 மில்லியன் கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 2018ல் சந்தா குறைக்கப்பட்டது.

இந்தக் காப்புறுதித் திட்ட நிதியை நீண்டகால வாக்கில் கட்டிக்காத்துவரும் அதேவேளையில், சந்தா தொகை தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக கழகம் அப்போதைக்கு அப்போது சந்தாவை மறுபரிசீலனை செய்துவருகிறது.

ஜூலை 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு இந்தத் திட்டத்தில் சேர்வோருக்குப் புதிய சந்தா பொருந்தும். இப்போதைய உறுப்பினர்கள் தங்கள் ஆண்டு சந்தாவைச் செலுத்தும்போது தொகை சரிசெய்யப்படும்.

வீட்டுக் கடனை அடைக்க சேம நிதியைப் பயன்படுத்தும் சேம நிதி உறுப்பினர்கள் இந்தக் காப்புறுதி திட்டத்தின் பாதுகாப்பைப் பெற வேண்டும் என்று கழகம் தெரிவித்தது. வீட்டுக் கடனை அடைக்க சேமநிதி சேமிப்பைப் பயன்படுத்தாதவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.