சுய தீவிரவாதப் போக்கிற்கு மாறிய முன்னாள் முழுநேர தேசிய சேவையாளர் படித்த நூலை தொடர்பு, தகவல் அமைச்சு தடை செய்துள்ளது. ஆயுதம் ஏந்தி புனிதப் போரில் ஈடுபவதை அந்தப் புத்தகம் ஊக்குவித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, மற்ற சமயத்தினருக்கு எதிரான பகைமை உணர்வை அது தூண்டியதாக அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 20 வயது அமிருல் அலி கைது செய்யப்பட்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமிருல் சுய தீவிரவாதப் போக்கிற்கு மாற 'இஸ் அட்தீன் அல் கஸாம் அதிரடிப் படைகள்: உயிர்த் தியாகம் செய்ய விரும்பும் இளம் தலைமுறையினர்' என்ற தலைப்பு கொண்ட அந்த நூலும் ஒரு காரணமாக இருந்ததாக அமைச்சு கூறியது.
அந்த நூலை அவர் 2015ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வாங்கியதாக அறியப்படுகிறது.
அந்த நூலுக்கான தடையை சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (மூயில்) வரவேற்றுள்ளது. வன்முறையைத் தூண்டுவது, மற்ற சமயத்தினருக்கு எதிராகப் பகைமையைத் தூண்டுவது ஆகியவை இஸ்லாமிய கோட்பாடு அல்ல என்று மூயிஸ் தெரிவித்தது.
இதற்கிடையே, சிங்கப்பூர் இளையர்கள் தீவிரவாதப் போக்கிற்கு மாறிவிடாதபடி அவர்
களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ அறிவுறுத்தியுள்ளார்.
"தொடர்ந்து விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். பல்லின, பல சமய மக்களிடையிலான நட்புறவை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும்," என்றார் அமைச்சர் டியோ.

