இம்மாதம் 14ஆம் தேதி கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து, பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் குழு வரம்பு போன்ற பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கை விதிகளை மீறியதற்காக 117 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யாதபோது முகக்கவசம் அணியாததும் அந்த விதிமீறல்களில் அடங்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, கடந்த 14ஆம் தேதி முதல் சமூக ஒன்றுகூடல்களில் குழுவாக ஐவர் வரை பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், சாங்கி கடற்கரை பூங்காவில் 17 பேர் கொண்ட குழுவும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் 13 பேர் கொண்ட குழுவும் பிடிபட்டன.
விதிமீறியமைக்காக 1,800 எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
இதனிடையே, இவ்வாண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ஆர்ச்சர்ட் ஹோட்டலின் ஒரே அறையில் 11 பேர் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியதை சிங்கப்பூர் பயணத்துறைக் கழக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்த ஹோட்டலுக்கு ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், அடுத்த மாதம் 24ஆம் தேதி வரை அறைகளுக்கு முன்பதிவு செய்யவும் அந்த ஹோட்டலுக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், தடையுத்தரவுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளுக்கு சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவோர் அறையில் இருந்த 11 பேரிடம் விசாரணை தொடர்கிறது. அவர்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
நீர் விளையாட்டுப் பகுதிகள், நீர்க் கேளிக்கை வசதிகள், முகாமிடங்கள், தேசிய பூங்காக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் பூங்காக்களிலும் தோட்டங்களிலும் இருக்கும் உணவு வாட்டும் முனைகள் ஆகியவை அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்து உள்ளது.
மேலும், கூட்டம் அதிகமாக இருந்தாலும் அல்லது மக்கள் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு இணங்காவிடினும் சில பூங்காக்கள், கடற்கரைப் பகுதிகள், புல்வெளிகள், பிற வசதிகள் மூடப்படலாம் என்றும் அமைச்சு கூறியிருக்கிறது.
வரும் வாரயிறுதிகளில் உணவு, பான வளாகங்களில் அதிகாரிகள் சோதனைகளைத் தீவிரப்படுத்துவர் என்று கூறியுள்ள அமைச்சு, அவற்றின் நடத்துநர்கள் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி இருக்கிறது.

