சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தை எட்ட, தங்களது கலாசாரத்தின் சில பகுதிகளைக் கைவிடுமாறு எந்த ஒரு சமூகமும் கேட்டுக்கொள்ளப்படவில்லை என்றும் மாறாக அவற்றின் பன்முகத்தன்மை தழுவிக்கொள்ளப்பட்டது என்றும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
கொள்கை ஆய்வுக் கழகமும் எஸ்.ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வுக் கழகமும் இணைந்து நேற்று ஏற்பாடு செய்திருந்த இனம் மற்றும் இனவாதம் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் வோங், மற்ற நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரம் தனித்துவமானது, வேறுபட்டது என்று குறிப்பிட்டார்.
பன்முகத்தன்மையை சிங்கப்பூர் குறைத்து மதிப்பிடாது என்று உறுதிபடக் கூறிய அவர், ஆனால் அதனை ஏற்றுக்கொண்டு, கொண்டாடி வருவதாகவும் சொன்னார்.
பல்லினச் சமுதாயம் என்பது மக்கள் கொண்டுள்ள தனிப்பட்ட அடையாளங்களை மறந்துவிடுவது எனப் பொருள்கொள்ளக்கூடாது என்றும் அதற்குக் கலாசார வேறுபாடுகளையும் வரலாறுகளையும் அழிக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் வோங் கூறினார்.
"மாறாக, அது நமது மரபுடைமைகளைத் தழுவி, நம்மை இணைக்கவும் ஒருவருக்கொருவர் மதிப்புகொள்ளுமாறும் செய்கிறது; ஒரு தேசிய அடையாளத்தையும் பகிர்ந்த நோக்கத்தையும் உள்ளடக்குமாறு செய்கிறது," என்றார் அவர்.
பல்லினச் சமுதாயம் குறித்த தனது அணுகுமுறையில் சிங்கப்பூரின் இருமொழிக் கொள்கை முக்கியப் பங்காற்றுகிறது என்றும் வட்டார மொழிகள் கொண்டுள்ள மரபுகளை அறிந்துகொள்ள குழந்தைகளை அது அனுமதிக்கிறது என்றும் அவர் சொன்னார்.
வட்டார மொழிகளைக் காக்க பெருமுயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பள்ளிக் குழந்தைகள் தங்களது தாய்மொழிகளைக் கற்க வலியுறுத்துவது, வட்டார மொழிகளின் தரங்களைக் கட்டிக்காக்க வளங்களை ஒதுக்குவது, வட்டார மொழி ஊடகங்கள் நிலைத்திருக்க உதவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

