செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f774f1bb-27f2-4d56-a334-a4a4df71f624
-

நியூ சௌத் வேல்சில் இருந்து வருவோர்க்குக் கூடுதல் கட்டுப்பாடு

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப் பாடுகள் கடுமைப்படுத்தப்படவுள்ளன. அதே வேளையில், அந்நாட்டின் விக்டோரியா மாநிலத்திலிருந்து வருவோர்க்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 சூழல் மாறியுள்ளதையடுத்து, இம்மாற்றங்கள் இடம்பெறுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. கடந்த 21 நாள்களில் நியூ சௌத் வேல்ஸ் சென்றிருந்து சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்ட கால அனுமதி அட்டை உடையோர் சிங்கப்பூர் திரும்பியதும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன்,

ஏழு நாள்களுக்கு அவர்கள் தங்களது வசிப்பிடத்திலேயே இருக்கும்படி வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும். அதன் முடிவிலும் அவர்கள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனிடையே, கடந்த 21 நாள்களில் விக்டோரியாவிற்குச் சென்றிருந்து, சிங்கப்பூர் திரும்புவோர், இங்கு வந்திறங்கியதும் செய்யும் பிசிஆர் பரிசோதனையின் முடிவு 'தொற்று இல்லை' என வந்தால், அவர்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப் படுவர். இன்றிரவு 11.59 மணியிலிருந்து இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

கிருமி தொற்றிய தாதியின் பிரிவில் 85% ஊழியர்க்குத் தொற்று இல்லை

தேசிய தொற்றுநோய்த் தடுப்பு மையத் தாதி ஒருவரை கொவிட்-19 தொற்றிய நிலையில், அவர் பணியாற்றும் பிரிவில் உள்ள மற்ற ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 85 விழுக்காட்டினர்க்குத் தொற்று பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்துள்ளன. எஞ்சிய ஊழியர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்று நேற்று முன்தினம் அம்மையம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

கதைக்களத்தில் சாகித்திய அகாடமி விருதாளர் சோ.தர்மன் பயிலரங்கு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திர கதைக் களத்தில் இடம்பெறும் நாவல் பயிலரங்கில் 'ஆராய்ச்சிகளின் அடிப்படையில் புனைவு இலக்கியம் படைப்பது எப்படி?' என்று சாகித்திய அகாடமி விருதுபெற்ற திரு சோ.தர்மன் பங்கேற்பாளர்களுடன் உரையாடவுள்ளார். தம்முடைய 'சூல்' நாவலுக்குத் தாம் செய்த ஆராய்ச்சி வழிமுறைகளையும் அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொள்வார்.

பயிலரங்கு நடைபெறும் நாள்: 4/7/2021 ஞாயிற்றுக் கிழமை, மாலை 4 மணி. இப்பயிலரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு தேவை. இந்த இணைப்பின்வழி முன்பதிவு செய்யலாம்: https://www.eventbrite.sg/e/read-fest-registration-157792137531?aff=erelpanelorg. ஸூம் இணைப்பு: https://nlbsingapore.zoom.

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/; திருவாட்டி கிருத்திகா - kiruthikavirku@gmail.com; திருவாட்டி பிரேமா மகாலிங்கம் - 91696996.